< Back
கிரிக்கெட்
முதல் டி20 கிரிக்கெட்: 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இங்கிலாந்து வெற்றி
கிரிக்கெட்

முதல் டி20 கிரிக்கெட்: 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இங்கிலாந்து வெற்றி

தினத்தந்தி
|
20 Sept 2022 11:24 PM IST

பாகிஸ்தான் அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி வெற்றிபெற்றது.

கராச்சி,

7 ஆட்டங்கள் கொண்ட 20 ஓவர் தொடரில் விளையாட இங்கிலாந்து அணி பாகிஸ்தானுக்கு சென்றுள்ளது. இவ்விரு அணிகள் இடையிலான முதலாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி கராச்சியில் இன்று நடைபெற்றது.

டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீசுவதாக அறிவித்தது. அதன்படி பாகிஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக கேப்டன் பாபர் ஆசம், விக்கெட் கீப்பர் முகமுது ரிஸ்வான் ஆகியோர் களம் இறங்கினர். சிறப்பாக ஆடிய இந்த ஜோடி முதல் விகெட்டுக்கு 85 ரன்கள் சேர்த்தனர்.

பின்னர் பாபர் ஆசம் 31 ரன்களுக்கு ஆட்டம் இழந்தார். அடுத்து வந்த ஹைதர் அலி 11 ரன்களுக்கு ஆட்டம் இழந்தார். அடுத்து வந்த ஷான் மசூத் 7 ரன்களுக்கும், அதிரடியாக ஆடி வந்த முகமது ரிஸ்வான் 68 ரன்களுக்கும் எடுத்து ஆட்டமிழந்தனர். அடுத்து 5வது விக்கெட்டுக்கு இப்திகார் அகமது, முகமது நவாஸ் ஆகியோர் ஜோடி சேர்ந்தனர். இதில் நவாஸ் வந்த வேகத்திலேயே 4 ரன்களுக்கு ஆட்டம் இழந்தார். இதையடுத்து குஷ்தில் ஷா களம் புகுந்தார்.

இறுதியில் பாகிஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 158 ரன்கள் எடுத்தது. அந்த அணி தரப்பில் குஷ்தில் ஷா 5 ரன்னுடனும், உஸ்மான் ரன் எடுக்காமலும் கடைசிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். இங்கிலாந்து அணி தரப்பில் லுக் வுட் 3 விக்கெட்டும், அடில் ரஷித் 2 விக்கெட்டும், சாம் கர்ரன் மற்றும் மொயீன் அலி தலா 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.

இதனைத்தொடர்ந்து 159 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து அணியின் சார்பில் பிலிப் சால்ட் மற்றும் அலெக்ஸ் ஹேல்ஸ் ஆகியோர் முதலாவதாக களமிறங்கினர். இந்த ஜோடியில் பிலிப் சால்ட் 10 ரன்களில் ஆட்டமிழக்க, அவரைத்தொடர்ந்து களமிறங்கிய டேவிட் மலான் 20 ரன்களும், பேன் டூக்கேட் 21 ரன்களு எடுத்து அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.

அடுத்ததாக அலெக்ஸ் ஹேல்சுடன், ஹேரி பூரூக் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய அலெக்ஸ் ஹேல்ஸ் தனது அரைசதத்தை பதிவு செய்திருந்தநிலையில் 53 (40) ரன்களில் கேட்ச் ஆனார். அடுத்தாக ஹேரி பூரூக்குடன் கேப்டன் மொயின் அலி ஜோடி சேர்ந்தார்.

இறுதியில் அதிரடி காட்டிய ஹேரி பூரூக் 42 (25) ரன்களும், மொயின் அலி 7 ரன்களும் எடுத்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். முடிவில் இங்கிலாந்து அணி 19.2 ஒவர்களில் 4 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 160 ரன்கள் எடுத்தது. பாகிஸ்தான் அணியின் சார்பில் அதிகபட்சமாக உஸ்மான் குவாதிர் 2 விக்கெட்டுகளும், தகானி மற்றும் ஹாரிஸ் ராப் ஆகியோர் தலா 1 விக்கெட்டும் வீழ்த்தினர். இதன்மூலம் பாகிஸ்தான் அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி வெற்றிபெற்றது.

மேலும் செய்திகள்