முதலில் பாண்ட்யாவுக்கு முக்கியத்துவம் கொடுப்பதை நிறுத்த வேண்டும் - இர்பான் பதான் விமர்சனம்
|இந்திய அணி முதலில் பாண்ட்யாவுக்கு முக்கியத்துவம் கொடுப்பதை நிறுத்த வேண்டும் என்று இர்பான் பதான் விமர்சித்துள்ளார்.
மும்பை,
ஐ.பி.எல். வரலாற்றில் 5 முறை சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணி புதிய கேப்டனான பாண்ட்யா தலைமையில் நடப்பு சீசனில் தடுமாறி வருகிறது. இதுவரை 9 போட்டிகளில் விளையாடியுள்ள மும்பை இந்தியன்ஸ் 3-ல் மட்டுமே வெற்றி கண்டு புள்ளி பட்டியலில் 9-வது இடத்தில் உள்ளது.
நடப்பு சீசனில் மும்பை அணியின் தோல்விகளுக்கு பேட்டிங், பவுலிங் ஆகிய இரண்டிலும் தாக்கத்தை ஏற்படுத்தாத பாண்ட்யா கேப்டனாகவும் சுமாராக முடிவுகளை எடுத்தது முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.
அதனால் பாண்ட்யாவின் பினிஷிங் பவர் குறைந்து விட்டதாக சமீபத்தில் இர்பான் பதான் வெளிப்படையாக விமர்சித்திருந்தார். இருப்பினும் முதன்மை வேகப்பந்து வீச்சு ஆல் ரவுண்டர் என்பதால் அவர் டி20 உலகக்கோப்பையில் தேர்வு செய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் இந்திய அணி முதலில் பாண்ட்யாவுக்கு முக்கியத்துவம் கொடுப்பதை நிறுத்த வேண்டும் என்று இர்பான் பதான் விமர்சித்துள்ளார். அதற்கான காரணம் குறித்து அவர் பேசியது பின்வருமாறு:-"ஹர்திக் பாண்ட்யாவுக்கு தற்போது கொடுக்கப்படும் பெரிய முக்கியத்துவத்தை இனிமேலும் கொடுக்கக் கூடாது என்பதில் இந்திய அணி தெளிவாக இருக்க வேண்டும் என்று நான் கருதுகிறேன். ஏனெனில் இன்னும் நாம் உலகக்கோப்பையை வெல்லவில்லை.
ஒருவேளை நீங்கள் அவரை உங்களுடைய முதன்மை ஆல் ரவுண்டராக கருதினால் பாண்ட்யா சர்வதேச கிரிக்கெட்டில் தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும். அந்த வகையில் பார்க்கும்போது சர்வதேச அளவில் தற்போது பாண்ட்யா எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. அவருடைய திறமையை பற்றி மட்டுமே நினைக்கும் நாம் ஐ.பி.எல். செயல்பாடுகளுக்கும் சர்வதேச செயல்பாடுகளுக்கும் இடையேயான வித்தியாசத்தில் குழப்பமடைந்துள்ளோம். முதலில் அவர் ஒரு வருடம் முழுவதும் தொடர்ச்சியாக விளையாட வேண்டும். விரும்பும்போது மட்டும் அவர் இந்தியாவுக்காக விளையாட முடியாது.
அப்படி எப்போதாவது மட்டும் விளையாடும் ஒருவரை தேர்ந்தெடுப்பதை இந்தியா முதலில் நிறுத்த வேண்டும். எனவே தனிநபர்களுக்கு முன்னுரிமை கொடுப்பதை இந்திய அணி நிறுத்த வேண்டும். அதைச் செய்தால் உங்களால் ஐ.சி.சி. தொடர்களை வெல்ல முடியாது. ஆஸ்திரேலியா போன்ற நாடுகள் எப்போதுமே அணிக்கு முன்னுரிமை கொடுத்து சூப்பர் ஸ்டார்களை உருவாக்குகின்றனர். அவர்களின் அணியில் ஒரு சூப்பர் ஸ்டார் இருப்பதில்லை. அவர்கள் அணியில் இருக்கும் அனைவரும் சூப்பர் ஸ்டார்களாக உள்ளனர். நீங்களும் அதை செய்யாவிட்டால் உங்களால் வெல்ல முடியாது" என்று கூறினார்.