< Back
கிரிக்கெட்
முதலாவது ஒரு நாள் போட்டி: ஆஸ்திரேலிய அணிக்கு 201 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது ஜிம்பாப்வே

Image Courtesy: ICC Twitter

கிரிக்கெட்

முதலாவது ஒரு நாள் போட்டி: ஆஸ்திரேலிய அணிக்கு 201 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது ஜிம்பாப்வே

தினத்தந்தி
|
28 Aug 2022 9:22 AM IST

ஜிம்பாப்வே அணி 47.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 200 ரன்களுக்கு ஆல் - அவுட் ஆனது.

டவுன்ஸ்வில்லி,

ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் செய்துள்ள ஜிம்பாப்வே அணி அங்கு 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்கிறது. அந்த தொடரின் முதலாவது போட்டி ஆஸ்திரேலியாவின் டவுன்ஸ்வில்லியில் இன்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணியின் கேப்டன் ஆரோன் பின்ச் பந்து வீச்சைத் தேர்வு செய்தார். இதன்படி ஜிம்பாப்வே அணி முதலில் களம் இறங்கியது.

அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக கயா மற்றும் மருமானி ஆகியோர் களம் இறங்கினர். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 42 ரன்கள் சேர்த்திருந்த நிலையில் கயா 17 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அடுத்ததாக வெஸ்லி மாதவேரே மருமானியுடன் ஜோடி சேர்ந்தார். பொறுமையாக ஆடிய மருமானி 45 ரன்கள் எடுத்திருந்த நிலையில் போல்ட் ஆனார்.

அடுத்து வந்த முன்யோங்கா 7 ரன்னிலும், சிக்கந்தர் ராசா 5 ரன்னிலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். அடுத்து கேப்டன் ரெஜிஸ் சகப்வா வெஸ்லி மாதவேரேவுடன் ஜோடி சேர்ந்தார். அணியின் ஸ்கோர் 185 ஆக உயர்ந்த போது சிறப்பாக ஆடிய மாதவேரே 72 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். சகப்வா -மாதவேரே இணை 5-வது விக்கெட்டுக்கு 63 ரன்கள் சேர்த்தனர்.

அடுத்து வந்த வீரர்கள் அடுத்தடுத்து சொற்ப ரன்களில் வெளியேற அந்த அணி 47.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 200 ரன்களுக்கு ஆல் - அவுட் ஆனது. ஆஸ்திரேலியா தரப்பில் கேமரூன் கிரின் 5 விக்கெட்டும், ஆடம் ஜாம்பா 3 விக்கெட்டும், ஸ்டார்க், மிட்செல் மார்ஷ் தலா 1 விக்கெட்டும் வீழ்த்தினர். அடுத்து 201 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலிய அணி ஆட உள்ளது.

மேலும் செய்திகள்