முதல் ஒருநாள் போட்டி: 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் நியூசிலாந்தை வீழ்த்தி பாகிஸ்தான் வெற்றி
|முதல் ஒருநாள் போட்டியில் பாகிஸ்தான் அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.
கராச்சி,
பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி அங்கு 2 டெஸ்ட், 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இதில் முதலாவதாக நடைபெற்ற டெஸ்ட் தொடர் 0-0 என டிராவில் முடிந்தது. அடுத்து இரு அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதலாவது போட்டி நேற்று கராச்சியில் நடைபெற்றது.
இந்த போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பந்துவீசுவதாக் அறிவித்தது. இதையடுத்து நியூசிலாந்தின் கான்வே மற்றும் பின் ஆலென் ஆகியோர் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கினர். ஆட்டத்தின் முதல் ஓவரை வீசிய நசீம் ஷா முதல் ஓவரிலேயே டேவான் கான்வேயின் விக்கெட்டை வீழ்த்தி அசத்தினார். இதையடுத்து கேப்டன் கேன் வில்லியம்சன் களம் இறங்கினார். அதிரடியாக ஆடி வந்த பின் ஆலென் 29 ரன்னில் அவுட் ஆனார்.
இதையடுத்து வில்லியம்சனுடன் டேரில் மிட்செல் ஜோடி சேர்ந்தார். பாகிஸ்தான் பந்துவீச்சாளர்கள் அபாரமாக பந்துவீசி எதிரணியை திணறடித்தனர். ரன் வந்தாலும் விக்கெட்டுகள் சீரான இடைவெளியில் விழுந்த வண்ணம் இருந்தன. அந்த அணியில் வில்லியம்சன் 26 ரன், டேரில் மிட்செல் 36 ரன், சிறிது நேரம் தாக்குப்பிடித்து விளையாடிய டாம் லதாம் 42 ரன்னிலும் அவுட் ஆகினர். இதையடுத்து 6-வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த க்லென் பிலிப்ஸ் மற்றும் மைக்கேல் பிரேஸ்வெல் ஜோடி பொறுமையாக ஆடி ஸ்கோரை உயர்த்தினர். நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்திய பிலிப்ஸ் 37 ரன்னிலும், பிரேஸ்வெல் 43 ரன்னிலும் அவுட் ஆகினர்.
இறுதியில் நியூசிலாந்து அணி 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 255 ரன்கள் எடுத்தது. பாகிஸ்தான் அணி தரப்பில் நசீம் ஷா 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். இதையடுத்து 256 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் பகர் சமான் 56 ரன்களும், கேப்டன் பாபர் அசாம் 66 ரன்களும் எடுத்து விக்கெட்டை பறிகொடுத்தனர்.
தொடர்ந்து களமிறங்கிய இமாம் 11 ரன்களும் ஹரிஷ் 32 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். பொறுப்பாக ஆடிய முகமது ரிஸ்வான் 77 ரன்களுடனும் சல்மான் 13 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். இறுதியில், பாகிஸ்தான் அணி 48.1 ஓவரில் 4 விக்கெட்டுகளுக்கு 258 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. 5 விக்கெட்டுகள் வீழ்த்திய நசீம் ஷா ஆட்ட நாயகன் விருது பெற்றார்.