< Back
கிரிக்கெட்
முதலாவது ஒருநாள் போட்டி; வெஸ்ட் இண்டீசை வீழ்த்தி ஆஸ்திரேலியா அபார வெற்றி

image courtesy; twitter/@ICC

கிரிக்கெட்

முதலாவது ஒருநாள் போட்டி; வெஸ்ட் இண்டீசை வீழ்த்தி ஆஸ்திரேலியா அபார வெற்றி

தினத்தந்தி
|
2 Feb 2024 4:11 PM IST

இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் ஆஸ்திரேலியா 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.

மெல்போர்ன்,

ஆஸ்திரேலியாவுக்கு சென்றுள்ள வெஸ்ட்இண்டீஸ் கிரிக்கெட் அணி டெஸ்ட் தொடரை 1-1 என்ற கணக்கில் சமன் செய்தது. அதுவும் பகல்-இரவு டெஸ்டில் ஆஸ்திரேலியாவின் ஆதிக்கத்துக்கு முற்றுப்புள்ளி வைத்ததுடன், 27 ஆண்டுக்கு பிறகு அந்த நாட்டில் வெஸ்ட் இண்டீஸ் டெஸ்டில் வெற்றி கண்டு வரலாறு படைத்தது.

இதனையடுத்து இவ்விரு அணிகள் இடையேயான 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடர் நடத்தப்படுகிறது. இதன் முதலாவது ஒரு நாள் போட்டி மெல்போர்னில் இன்று நடைபெற்றது.

இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் ஆஸ்திரேலிய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் விரைவில் ஆட்டமிழந்தனர். 48.4 ஓவர்கள் தாக்குப்பிடித்த வெஸ்ட் இண்டீஸ் அணி 231 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆல் அவுட் ஆனது. அந்த அணியில் அதிகபட்சமாக கீசி கார்டி 88 ரன்கள் அடித்தார். ஆஸ்திரேலிய அணி தரப்பில் அதிகபட்சமாக சேவியர் பார்ட்லெட் 4 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார்.

இதனையடுத்து 232 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணியின் தொடக்க ஆட்டக்காரர் டிராவிஸ் ஹெட் விரைவில் ஆட்டம் இழந்து ஏமாற்றம் அளித்தார். இதன் பின் கை கோர்த்த கேமரூன் கிரீன் - ஜோஷ் இங்கிலிஸ் ஜோடி சிறப்பாக விளையாடி அணியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றது. அதிரடியாக விளையாடிய ஜோஷ் இங்கிலிஸ் 43 பந்துகளில் 65 குவித்த நிலையில் ஆட்டமிழந்தார்.

பின்னர் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஸ்டீவன் சுமித், கேமரூன் கிரீனுடன் கை கோர்த்து மேற்கொண்டு விக்கெட் விழாமல் அணியை வெற்றி பெற வைத்தார்.38.3 ஓவர்களிலேயே 2 விக்கெட்டை மட்டுமே இழந்த ஆஸ்திரேலியா 232 ரன்கள் அடித்து 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. கேமரூன் கிரீன் 77 ரன்களிலும், ஸ்டீவன் சுமித் 79 ரன்களிலும் கடைசி வரை ஆட்டமிழக்காமல் அணியை வெற்றி பெற செய்தனர்.

இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் ஆஸ்திரேலியா 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.


மேலும் செய்திகள்