உலகக் கோப்பையில் சதம் அடித்த முதல் ஆப்கானிஸ்தான் வீரர்...! வரலாறு படைத்த இப்ராஹிம் சத்ரான்
|உலகக் கோப்பையில் சதம் விளாசிய முதல் ஆப்கானிஸ்தான் வீரர் என்ற பெருமையை இப்ராஹிம் சத்ரான் பெற்றுள்ளார்
மும்பை,
உலக கோப்பை தொடரின் 39வது லீக் ஆட்டம் மும்பை வான்கடே மைதானத்தில் இன்று நடைபெற்று வருகிறது. இதில் ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான் அணிகள் மோதுகின்றன. டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் பேட்டிங் தேர்வு செய்தது.அதன்படி, ஆப்கானிஸ்தான் அணி முதலில் களமிறங்கியது.
தொடக்க ஆட்டக்காரர் குர்பாஸ் 21 ரன்னில் அவுட்டானார். அடுத்து இறங்கிய ரஹ்மத் ஷா 30 ரன்னும், கேப்டன் ஹஷ்மதுல்லா ஷஹிதி 26 ரன்னும் எடுத்து ஆட்டமிழந்தனர். அஸ்மதுல்லா ஒமர்சாய் 22 ரன்னிலும், முகமது நபி 12 ரன்னிலும் வெளியேறினர்.ஒருபுறம் விக்கெட்டுகள் வீழ்ந்தாலும், மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் இப்ராஹிம் சத்ரான் பொறுப்புடன் ஆடி சதமடித்து அசத்தினார்.இறுதியில், ஆப்கானிஸ்தான் 5 விக்கெட் இழப்புக்கு 291 ரன்களை எடுத்தது. இப்ராஹிம் சத்ரான் 129 ரன்னும், ரஷித் கான் 35 ரன்னும் எடுத்தனர்.இதையடுத்து, 292 ரன்களை எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலியா அணி ஆஸ்திரேலியா பேட் செய்து வருகிறது.
இந்த நிலையில் ,இப்போட்டியில் சதம் அடித்ததன் மூலம் உலகக் கோப்பையில் சதம் விளாசிய முதல் ஆப்கானிஸ்தான் வீரர் என்ற பெருமையை இப்ராஹிம் சத்ரான் பெற்றுள்ளார். இதற்கு முன்னதாக ஆப்கானிஸ்தான் வீரர் சமியுல்லா ஷின்வாரி உலகக் கோப்பையில் 96 ரன்கள் எடுத்திருந்ததே தனிநபர் அதிகபட்ச ஸ்கோராக இருந்தது.