சிக்சர் என உறுதியான நிலையில்... ரன் அவுட்; வைரலான வீடியோ
|பந்து கீழே விழுந்ததும் உடனே செயல்பட்ட புர்தெல், எழுந்து ஓடி சென்று அதனை எடுத்து விக்கெட் கீப்பரான ஆசிப் ஷேக்கை நோக்கி வீசினார்.
கீர்த்திப்பூர்,
நேபாளம், நெதர்லாந்து மற்றும் நமீபியா அணிகள் மோதும் சர்வதேச டி20 முத்தரப்பு போட்டி தொடர் நடந்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக நேபாளத்தின் கீர்த்திப்பூர் நகரில் நடந்த போட்டியொன்றில், நேபாளம் மற்றும் நெதர்லாந்து அணிகள் இன்று மோதின.
இதில், பந்து வீச்சை தேர்வு செய்த நேபாள அணி, 120 ரன்களில் நெதர்லாந்து அணியை சுருட்டியது. இந்த போட்டியில், ரோயெலப் வான் டர் மெர்வே அடித்த பந்து ஒன்று உறுதியாக சிக்சர் போகும் என பார்க்கப்பட்டது.
ஆனால், பீல்டிங் பகுதியில் இருந்த குஷால் புர்தெல் அதிரடியாக தவ்வி, அதனை தடுத்து விட்டார். இதனால், பந்து எல்லை கோட்டுக்குள்ளேயே விழுந்தது. பந்து கீழே விழுந்ததும் உடனே செயல்பட்ட புர்தெல், எழுந்து ஓடி சென்று அதனை எடுத்து விக்கெட் கீப்பரான ஆசிப் ஷேக்கை நோக்கி வீசினார்.
அப்போது, விவான் கிங்மா அடுத்து ரன் எடுப்பதற்காக ஓடினார். இதனை சரியாக பயன்படுத்தி ஆசிப் அவரை ரன் அவுட் ஆக்கினார். இதனால், 4 ரன்களில் விவான் வெளியேறினார். இந்த வீடியோ வைரலாகி வருகிறது.
போட்டியில், 19.3 ஓவர்களில் 120 ரன்களுக்கு நெதர்லாந்து ஆட்டமிழந்தது. தொடர்ந்து விளையாடிய நேபாள அணி 15.2 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் கைவசம் இருந்தபோது, இலக்கை அடைந்து வெற்றி பெற்றது.