கடைசி ஒரு நாள் போட்டி: இந்தியா அபார வெற்றி - தொடரையும் கைப்பற்றி அசத்தல்
|வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான கடைசி ஒரு நாள் போட்டியில் 200 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி பெற்றது.
தரோபா,
இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி டிரினிடாட்டின் தரோபாவில் உள்ள பிரையன் லாரா ஸ்டேடியத்தில் நேற்று நடந்தது. இந்திய அணியில் ரோகித் சர்மா, விராட் கோலிக்கு மீண்டும் ஓய்வு அளிக்கப்பட்டது. இதே போல் அக்ஷர் பட்டேல், உம்ரான் மாலிக் நீக்கப்பட்டு அவர்களுக்கு பதிலாக ருதுராஜ் கெய்க்வாட், ஜெய்தேவ் உனட்கட் சேர்க்கப்பட்டனர்.
'டாஸ்' ஜெயித்த வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் ஷாய் ஹோப் முதலில் இந்தியாவை பேட்டிங் செய்ய பணித்தார். இதன்படி இஷான் கிஷனும், சுப்மன் கில்லும் இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் புகுந்தனர். இஷான் கிஷன் 9 ரன்னில் வழங்கிய மிக சுலபமான கேட்ச் வாய்ப்பை கேசி கர்டி வீணடித்தார். பொன்னான வாய்ப்பை கெட்டியாக பிடித்து கொண்ட கிஷன் வேகமாக ரன் சேர்ப்பதில் கவனம் செலுத்தினார். கில்லும் ஏதுவான பந்துகளை எல்லைக்கோட்டுக்கு தெறிக்கவிட ஸ்கோர் மளமளவென உயர்ந்தது. ஜோசப், ஷெப்பர்டு ஓவர்களில் சிக்சர் விளாசி தனது 6-வது அரைசதத்தை கிஷன் எட்டினார். சிறிது நேரத்தில் சுப்மன் கில்லும் 6-வது அரைசதத்தை கடந்தார்.
கில் 85 ரன்
இவர்கள் முதல் விக்கெட்டுக்கு 143 ரன்கள் (19.4 ஓவர்) எடுத்து பிரிந்தனர். வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் அந்த நாட்டு அணிக்கு எதிராக இந்திய தொடக்க ஜோடியின் அதிகபட்ச பார்ட்னர்ஷிப் இதுவாகும். இதற்கு முன்பு 2017-ம் ஆண்டு ஷிகர் தவான்- ரஹானே இணை 132 ரன் எடுத்ததே இந்த வகையில் அதிகபட்சமாக இருந்தது.
இஷான் கிஷன் 77 ரன்களில் (64 பந்து, 8 பவுண்டரி, 3 சிக்சர்) ஸ்டம்பிங் செய்யப்பட்டார். அடுத்து வந்த ருதுராஜ் கெய்க்வாட் (8 ரன்) நிலைக்கவில்லை. 3-வது விக்கெட்டுக்கு அடியெடுத்து வைத்த சஞ்சு சாம்சன், சந்தித்த முதல் ஓவரிலேயே 2 அட்டகாசமான சிக்சர்களை ஓடவிட்டார். இருவரும் துரிதமாக ரன் திரட்டியதுடன் ரன்ரேட்டையும் 7-க்கு மேலாக நகர்த்தினர்.
அணியின் ஸ்கோர் 223-ஐ எட்டிய போது சஞ்சு சாம்சன் 51 ரன்களில் (41 பந்து, 2 பவுண்டரி, 4 சிக்சர்) கேட்ச் ஆனார். சதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட சுப்மன் கில் (85 ரன், 92 பந்து, 11 பவுண்டரி) குடகேஷ் மோட்டியின் சுழலில் சிக்கினார். இதன் பின்னர் கேப்டன் ஹர்திக் பாண்ட்யாவும், சூர்யகுமார் யாதவும் கைகோர்த்து அதிரடியாக மட்டையை சுழற்றினர். சூர்யகுமார் தனது பங்குக்கு 35 ரன்கள் (30 பந்து, 2 பவுண்டரி, 2 சிக்சர்) எடுத்தார். பாண்ட்யா கடைசி ஓவரில் இரு மெகா சிக்சர்களை பறக்க விட்டதுடன் அணி ஸ்கோரை 350-ஐ தாண்டுவதற்கு உதவினார்.
இந்தியா 351 ரன்
நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர் முடிவில் இந்தியா 5 விக்கெட்டுக்கு 351 ரன்கள் குவித்தது. வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் அந்த நாட்டு அணிக்கு எதிராக இந்தியாவின் சிறந்த ஸ்கோர் இதுவாகும். ஹர்திக் பாண்ட்யா 70 ரன்னுடனும் (52 பந்து, 4 பவுண்டரி, 5 சிக்சர்), ஜடேஜா 8 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.
பின்னர் 352 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி இந்திய அணியினரின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இதன்படி அந்த அணியின் சார்பில் முதலாவதாக களமிறங்கிய பிராண்டன் கிங் (0) ரன் ஏதும் எடுக்காமலும், கெய்ல் மேயர்ஸ் 4 ரன்களும், ஷாய் ஹோப் 5 ரன்களும், கார்டி 6 ரன்களும், ஹெட்மயர் 4 ரன்களும், ஷேப்பர்டு 8 ரன்களும், ஓரளவு தாக்குப்பிடித்து ஆடிய அலிக் அதனாசே 32 ரன்களும், காரியா 19 ரன்களும் எடுத்து வெளியேறினர்.
அவர்களைத்தொடர்ந்து அல்சாரி ஜோசப்புடன், குடாகேஷ் மோட்டி ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடியின் நிதானமான ஆட்டத்தால் அணியின் ரன் ரேட் மெதுவாக உயர்ந்தது. பின்னர் இந்த ஜோடியில் ஜோசப் 26 ரன்களில் கேட்ச் ஆனார். அவரைத்தொடர்ந்து களமிறங்கிய சீல்ஸ் 1 ரன்னில் போல்ட் ஆகி வெளியேறினார்.
இறுதியில் மொட்டி 39 ரன்களுடன் கடைசிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். முடிவில் வெஸ்ட் இண்டீஸ் அணி 35.3 ஒவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 151 ரன்கள் மட்டுமே எடுத்தது. இந்திய அணியின் சார்பில் சிறப்பாக பந்து வீசிய ஷர்துல் தாக்கூர் 4 விக்கெட்டுகளும், முகேஷ் குமார் 3 விக்கெட்டுகளும், குல்தீப் யாதவ் 2 விக்கெட்டுகளும், உனத்கட் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதன்மூலம் வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான கடைசி ஒரு நாள் போட்டியில் 200 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி பெற்றது. அத்துடன் ஒருநாள் தொடரை 2-1 என கணக்கில் கைப்பற்றி அசத்தியது.
இந்திய அணி 2006-ம் ஆண்டுக்கு பிறகு வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான ஒரு நாள் தொடரை இழந்ததில்லை என்ற பெருமையை தக்க வைத்தது.