பீல்ட் அப்ஸ்ட்ரக்சன் வாபஸ்; பேட் கம்மின்ஸிடம் இரண்டு கேள்விகளை எழுப்பிய இந்திய முன்னாள் வீரர்
|தோனியை பெவிலியனிலேயே வைத்திருப்பதற்கான தந்திரமான அழைப்பா? என முகமது கைப் கேள்வி எழுப்பி உள்ளார்.
ஐதராபாத்,
ஐ.பி.எல் தொடரில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் சென்னை அணியை வீழ்த்தி சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி அபார வெற்றி பெற்றது. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் ஆடிய சென்னை 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 165 ரன்கள் மட்டுமே எடுத்தது. சென்னை தரப்பில் அதிகபட்சமாக ஷிவம் துபே 45 ரன்கள் எடுத்தார்.
இதையடுத்து 166 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய ஐதராபாத் அணி 18.1 ஓவர்களில் 4 விக்கெட்டை மட்டும் இழந்து 166 ரன் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஐதராபாத் தரப்பில் எய்டன் மார்க்ரம் 50 ரன்கள் அடித்தார்.
இந்நிலையில் இந்த ஆட்டத்தில் சென்னை அணி பேட்டிங் செய்து கொண்டிருந்த போது ஆட்டத்தின் 19வது ஓவரை புவனேஷ்வர் குமார் வீசினார். அந்த ஓவரின் 4வது பந்தை எதிர்கொண்ட ஜடேஜா அதை நேராக அடித்தார். அது நேராக புவனேஷ்வர் குமார் கைகளுக்கு சென்றது. உடனே பந்தை எடுத்த புவனேஷ்வர் குமார் ஸ்டம்பை நோக்கி எரிந்து ரன் அவுட் செய்ய முயற்சித்தார்.
மறுபுறம் அவுட்டாவாதிலிருந்து தப்பிக்க ரவீந்திர ஜடேஜா குறுக்கே வந்ததால் பந்து அவர் மீது பட்டது. அதன் காரணமாக "பீல்ட் அப்ஸ்ட்ரக்சன்" விதிமுறைப்படி தங்களுக்கு அவுட் கொடுக்குமாறு ஐதராபாத் விக்கெட் கீப்பர் ஹென்றிச் க்ளாசென் நடுவரிடம் முறையிட்டார்.
உடனே கள நடுவர்கள் நிலைமையை சோதிப்பதற்காக 3வது நடுவரின் உதவியை நாடினார்கள். ஆனால் அப்போது தலையிட்ட ஐதராபாத் கேப்டன் பேட் கம்மின்ஸ் அந்த முடிவை வாபஸ் பெறுவதாக அறிவித்தார். அதனால் மேற்கொண்டு நடுவர்கள் எதுவும் செய்யாததால் ஜடேஜா தொடர்ந்து பேட்டிங் செய்தார்.
இந்நிலையில், ஜடேஜா அவுட்டானால் அடுத்ததாக தோனி வந்து அதிரடியாக ரன்கள் குவிப்பார் என்பதால் அதை தடுப்பதற்காகவே பீல்ட் அப்ஸ்ட்ரக்சன் முடிவை வாபஸ் பெற்றீர்களா..? என பேட் கம்மின்ஸ் இடம் இந்திய முன்னாள் வீரர் முகமது கைப் கேள்வி எழுப்பியுள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் வலைத்தளப்பக்கத்தில் வெளியிட்ட பதிவில், பீல்டை தடுத்ததற்காக, ஜடேஜாவுக்கு எதிராக அப்பீல் செய்யாத பேட் கம்மின்ஸிடம் 2 கேள்விகளை கேட்கிறேன். தடுமாறும் ஜடேஜாவை களத்திலேயே வைத்து அதிரடியாக விளையாடக்கூடிய தோனியை பெவிலியனிலேயே வைத்திருப்பதற்கான தந்திரமான அழைப்பா?. டி20 உலகக் கோப்பையில் இதே இடத்தில் விராட் கோலி இருந்திருந்தால் இதையே நீங்கள் செய்திருப்பீர்களா?. இவ்வாறு அதில் பதிவிடப்பட்டுள்ளது.