< Back
கிரிக்கெட்
டெஸ்ட் கிரிக்கெட்: மாபெரும் சாதனை பட்டியலில் இம்ரான் கான், கபில் தேவை பின்னுக்கு தள்ளிய ஜடேஜா
கிரிக்கெட்

டெஸ்ட் கிரிக்கெட்: மாபெரும் சாதனை பட்டியலில் இம்ரான் கான், கபில் தேவை பின்னுக்கு தள்ளிய ஜடேஜா

தினத்தந்தி
|
30 Sept 2024 7:19 PM IST

வங்காளதேசத்திற்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் ஜடேஜா ஒரு விக்கெட் வீழ்த்தினார்.

கான்பூர்,

இந்தியா - வங்காளதேசம் இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி கான்பூரில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற இந்தியா பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதல் இன்னிங்சை தொடங்கிய வங்காளதேசம் முதல் நாளில் 35 ஓவர்களில் 3 விக்கெட்டுக்கு 107 ரன்கள் எடுத்திருந்தபோது மழை குறுக்கிட்டது. அதனால் முதல் நாள் ஆட்டம் அத்துடன் நிறுத்தப்பட்டது. அதனை தொடர்ந்து 2-வது மற்றும் 3-வது நாள் ஆட்டங்கள் மழை காரணமாக ரத்து செய்யப்பட்டன.

இந்நிலையில் 4-வது நாள் ஆட்டம் இன்று நடைபெற்றது. தொடர்ந்து பேட்டிங் செய்த வங்காளதேசம் முதல் இன்னிங்சில் 233 ரன்களில் ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக மொமினுல் ஹக் 107 ரன்கள் அடிக்க, இந்தியா தரப்பில் அதிகபட்சமாக பும்ரா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

இதனையடுத்து முதல் இன்னிங்சை தொடங்கிய இந்தியா அதிரடியாக விளையாடி 34.4 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 285 ரன்கள் அடித்த நிலையில் டிக்ளேர் செய்தது. இது வங்காளதேசத்தை விட 52 ரன்கள் முன்னிலையாகும்.

இந்தியா தரப்பில் அதிகபட்சமாக ஜெய்ஸ்வால் 72 ரன்களும், கே.எல். ராகுல் 68 ரன்களும் அடித்தனர். வங்காளதேச தரப்பில் ஷகிப் அல் ஹசன் மற்றும் மெஹிதி ஹசன் மிராஸ் தலா 4 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.

பின்னர் 52 ரன்கள் பின்னிலையுடன் 2-வது இன்னிங்சை தொடங்கிய வங்காளதேசம் 26 ரன்களுக்குள் 2 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது. ஹசன் மக்மூத் 4 ரன்களுடனும், மொமினுல் ஹக் ரன் எதுவுமின்றியும் களத்தில் உள்ளனர். இந்தியா தரப்பில் அஸ்வின் 2 விக்கெட்டுகள் வீழ்த்தி உள்ளார்.

முன்னதாக இந்த போட்டியின் முதல் இன்னிங்சில் ரவீந்திர ஜடேஜா 1 விக்கெட் வீழ்த்தினார். இது டெஸ்ட் கிரிக்கெட்டில் அவரது 300-வது விக்கெட்டாக பதிவானது.

இதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் குறைந்த போட்டிகளில் 3000+ ரன்கள் மற்றும் 300+ விக்கெட்டுகள் வீழ்த்திய வீரர்களின் மாபெரும் சாதனை பட்டியலில் இம்ரான் கான், கபில் தேவை முந்தி 2-வது இடத்தை பிடித்துள்ளார்.

அந்த பட்டியல்:-

1. இயன் போத்தம் - 72 போட்டிகள்

2. ஜடேஜா - 74 போட்டிகள்

3.இம்ரான் கான் - 75 போட்டிகள்

4. கபில் தேவ்/ரிச்சர்டு ஹாட்லி - 83 போட்டிகள்

மேலும் செய்திகள்