< Back
கிரிக்கெட்
ஒருநாள் போட்டிகளில் அதிவேக 5 ஆயிரம் ரன்கள் பார்ட்னர்ஷிப்; கோலி-ரோகித் ஜோடி சாதனை..!!

image courtesy; AFP

கிரிக்கெட்

ஒருநாள் போட்டிகளில் அதிவேக 5 ஆயிரம் ரன்கள் பார்ட்னர்ஷிப்; கோலி-ரோகித் ஜோடி சாதனை..!!

தினத்தந்தி
|
13 Sep 2023 6:50 AM GMT

ஒருநாள் போட்டிகளில் அதிவேகமாக 5 ஆயிரம் ரன்கள் எடுத்த பார்ட்னர்ஷிப் என்ற சாதனையை கோலி - ரோகித் ஜோடி படைத்துள்ளது.

கொழும்பு,

16-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி இலங்கை தலைநகர் கொழும்பில் உள்ள பிரேமதாசா ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. இதில் சூப்பர்4 சுற்றுக்கு தகுதி பெற்றுள்ள இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்காளதேசம் அணிகள் தங்களுக்குள் தலா ஒரு முறை மோத வேண்டும். இதன் முடிவில் முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்குள் அடியெடுத்து வைக்கும்.

இந்த நிலையில் சூப்பர்4 சுற்றின் 4-வது ஆட்டத்தில் இந்தியாவும், நடப்பு சாம்பியன் இலங்கையும் நேற்று மல்லுகட்டின. 'டாஸ்' ஜெயித்த இந்திய கேப்டன் ரோகித் சர்மா முதலில் பேட்டிங்கை தேர்ந்தெடுத்தார். இதன்படி அவரும், சுப்மன் கில்லும் இந்தியாவின் இன்னிங்சை தொடங்கினர். சுழலுக்கு சாதகமான இந்த ஆடுகளத்தில் இந்திய அணி 49.1 ஓவர்களில் 213 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. இலங்கை தரப்பில் துனித் வெல்லாலகே 5 விக்கெட்டுகள், சரித் அசாலங்கா 4 விக்கெட்டுகள் மற்றும் மகேஷ் தீக்சனா 1 விக்கெட் வீழ்த்தினர்.

இதையடுத்து 214 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய இலங்கை அணியை 41.3 ஓவரில் 172 ரன்களில் இந்திய பந்து வீச்சாளர்கள் ஆல் அவுட் ஆக்கினர். இதன் மூலம் 41 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது. இந்திய அணி தரப்பில் குல்தீப் 4 விக்கெட்டுகள், ஜடேஜா மற்றும் பும்ரா தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.

இந்த ஆட்டத்தில் 2-வது விக்கெட்டுக்கு இந்தியாவின் ரோகித் சர்மா, விராட் கோலி ஜோடி 10 ரன்கள் எடுத்தது. இதன் மூலம் அவர்கள் பார்ட்னர்ஷிப்பில் 5 ஆயிரம் ரன்களை கடந்துள்ளனர். 86 ஒரு நாள் போட்டி இன்னிங்சில் இதை எட்டி சாதனை படைத்து இருக்கிறார்கள். இதற்கு முன்பு வெஸ்ட் இண்டீசின் கார்டன் கிரீனிட்ஜ் டெஸ்மான்ட் ஹெய்ன்ஸ் ஜோடி 97 இன்னிங்சில் 5 ஆயிரம் ரன்களை எட்டியதே அதிவேகமாக இருந்தது. தற்போது அந்த சாதனையை உடைத்து கோலி - ரோகித் ஜோடி புதிய சாதனை படைத்துள்ளது.

மேலும் இந்திய தரப்பில் சச்சின் - சவுரவ் கங்குலி, ஷிகர் தவான் - ரோகித் சர்மா ஆகியோருக்கு பிறகு 5 ஆயிரம் ரன்களை கடந்த ஜோடியாகவும் ரோகித் - கோலி திகழ்கிறார்கள்.

மேலும் செய்திகள்