தோனி, கோலிபோல அவரையும் ரசிகர்கள் கொண்டாட வேண்டும் - ஹர்பஜன் சிங்
|ஐ.பி.எல். தொடரில் கடந்த 16-ம் தேதி நடைபெற்ற லீக் ஆட்டத்தில் கொல்கத்தா அணியை வீழ்த்தி ராஜஸ்தான் வெற்றி பெற்றது.
மும்பை,
ரசிகர்களை மகிழ்வித்து வரும் ஐ.பி.எல். தொடரில் கடந்த 16-ம் தேதி நடைபெற்ற லீக் ஆட்டத்தில் கொல்கத்தா அணியை வீழ்த்தி ராஜஸ்தான் வெற்றி பெற்றது.
அந்தப் போட்டியில் கொல்கத்தா நிர்ணயித்த 224 ரன்களை துரத்திய ராஜஸ்தானுக்கு கேப்டன் சஞ்சு சாம்சன், ஜெய்ஸ்வால், ஹெட்மயர் போன்ற முக்கிய பேட்ஸ்மேன்கள் பெரிய ரன்கள் எடுக்க தவறினர். அதனால் ஒரு கட்டத்தில் ராஜஸ்தானின் வெற்றி கேள்விக்குறியானது. ஆனால் எதிர்புறம் நங்கூரமாக விளையாடிய துவக்க வீரர் ஜோஸ் பட்லர் அவுட்டாகாமல் 20 ஓவர்களும் பேட்டிங் செய்து 9 பவுண்டரி 6 சிக்சருடன் சதமடித்து 107* (60) குவித்து கடைசி பந்தில் ராஜஸ்தானை வெற்றி பெற வைத்தார்.
ஹர்பஜன் கருத்து:
இந்நிலையில் இதே வெற்றியை தோனி அல்லது விராட் கோலி பெற்றுக் கொடுத்திருந்தால் அதை ரசிகர்கள் திருவிழாபோல் கொண்டாடியிருப்பார்கள் என்று ஹர்பஜன் சிங் கூறியுள்ளார். இருப்பினும் பட்லரை ரசிகர்கள் பெரிய அளவில் கொண்டாடவில்லை என்று தெரிவிக்கும் அவர் இது குறித்து பேசியது பின்வருமாறு:-
"ஸ்பெஷல் பிளேயரான அவர் (பட்லர்) வித்தியாசமான லெவெலில் விளையாடினார். ஜோஸ் பட்லர் இதை முதல் முறையாக செய்யவில்லை. கடந்த காலங்களில் அவர் இதை நிறைய முறை செய்ததை பார்த்துள்ளோம். அற்புதமான வீரராக இருந்தும் இந்தியர் கிடையாது என்பதால் அவரைப் பற்றி நாம் அதிகம் பேசுவதில்லை. ஒருவேளை இதே சதத்தை விராட் கோலி அடித்திருந்தாலோ அல்லது தோனி 3 சிக்சர்கள் அடித்ததற்காக புகழ்ந்ததைபோல் அவரைப் பற்றி நாம் 2 மாதங்கள் புகழ் பாடியிருப்போம்.
எனவே நம்முடைய ஜாம்பவான்களைப்போலவே அவரையும் நாம் கொண்டாட வேண்டும். அவரும் இந்த தொடரின் ஜாம்பவான்களில் ஒருவர். அப்போட்டியில் மிகவும் அமைதியாக விளையாடிய அவர் சமயம் கிடைக்கும்போது பவுண்டரிகளை அடித்து மற்ற நேரங்களில் சிங்கிள் டபுள்களை எடுத்தார். ஒருபுறம் பேட்ஸ்மேன்கள் அவுட்டானாலும் மறுபுறம் நங்கூரமாக நின்று அணியை வெற்றி பெற வைத்தார்" என்று கூறினார்.