< Back
கிரிக்கெட்
நவீன் உல் ஹக் - கம்பீர் விஷயத்தில் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்து விட்டனர் - விராட் கோலி
கிரிக்கெட்

நவீன் உல் ஹக் - கம்பீர் விஷயத்தில் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்து விட்டனர் - விராட் கோலி

தினத்தந்தி
|
12 April 2024 2:55 PM IST

நவீன் உல் ஹக் மற்றும் கவுதம் கம்பீர் ஆகியோருடன் சமாதானம் ஆனதால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்ததாக விராட் கோலி தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

கடந்த ஐ.பி.எல். தொடரில் லக்னோ - ஆர்.சி.பி. அணிகளுக்கு இடையிலான போட்டியின்போது விராட் கோலி, லக்னோ அணியின் நவீன் உல் ஹக் மற்றும் கவுதம் கம்பீர் இடையே மோதல் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து கவுதம் கம்பீர் மற்றும் நவீன் உல் ஹக் செல்லும் இடங்களில் எல்லாம் கோலி.. கோலி... என்று கோஷமிட்டு ரசிகர்கள் கிண்டல் செய்து வந்தனர். ஒரு கட்டத்தில் ரசிகர்களின் செயல்பாடுகள் எல்லை மீறியது.

இதன்பின் உலகக்கோப்பை தொடரின்போது நவீன் உல் ஹக்கை நேரடியாக அழைத்து விராட் கோலி கட்டி பிடித்து நட்பு பாராட்டினார். அதுமட்டுமல்லாமல் நவீன் உல் ஹக்கிற்கு ஆதரவாக ரசிகர்கள் கோஷம் எழுப்ப வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். இதன் பின் நவீன் உல் ஹக் - விராட் கோலி இடையிலான மோதல் முடிவுக்கு வந்தது.

இதனைத் தொடர்ந்து நடப்பு ஐ.பி.எல். தொடரில் கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியின்போது விராட் கோலி களத்தில் பேட்டிங் செய்து கொண்டிருந்தார். இதில் இடைவேளையின்போது மைதானத்திற்கு வந்த கவுதம் கம்பீர், நேரடியாக விராட் கோலியை அழைத்து கட்டிப்பிடித்து நட்பு பாராட்டினார். அனைவரும் களத்தில் மிகப்பெரிய மோதல் இருக்கும் என்று எதிர்பார்த்த நிலையில், சூழலை இருவரும் சாதாரணமாக கடந்து சென்றனர்.

இதுகுறித்து விராட் கோலி மனம் திறந்துள்ளார். அதில், "நவீன் உல் ஹக்கை கட்டி பிடித்து நட்பு பாராட்டியது ரசிகர்கள் பலருக்கும் ஏமாற்றத்தை கொடுத்தது என்று நினைக்கிறேன். மைதானத்தில் ரசிகர்கள் பலரும் அவர் என்ன சொல்வார் என்று எதிர்பார்ப்பில் கரகோஷம் எழுப்பி கொண்டிருந்தார்கள். ஆனால் நான் அழைத்து நட்பு பாராட்டியதை யாரும் எதிர்பார்க்கவில்லை.

அதேபோல் கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியின்போது கவுதம் கம்பீரையும் கட்டிப்பிடித்து நட்பு பாராட்டினேன். ரசிகர்கள் எதிர்பார்த்த மசாலா மற்றும் பொழுதுபோக்கு முடிவுக்கு வந்ததால், ஏமாற்றத்தை வெளிப்படுத்தினர்" என்று தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்