< Back
கிரிக்கெட்
மகேந்திர சிங் தோனிக்கு புகழாரம் சூட்டிய பாப் டு பிளெஸ்சிஸ்..!

image courtesy; AFP

கிரிக்கெட்

மகேந்திர சிங் தோனிக்கு புகழாரம் சூட்டிய பாப் டு பிளெஸ்சிஸ்..!

தினத்தந்தி
|
8 Jan 2024 9:52 PM IST

தோனியை போன்ற மகத்தான கேப்டன்களின் கீழ் நீங்கள் விளையாடும்போது உங்களை நீங்கள் புரிந்து கொள்ள முடியும்.

கேப்டவுன்,

இந்தியாவில் நடைபெறும் ஐபிஎல் போன்று தென் ஆப்பிரிக்காவில் எஸ்ஏ20 லீக் தொடர் நடைபெறுகிறது. அதில் ஐபிஎல் அணிகளின் உரிமையாளர்களே அணிகளை ஒப்பந்தம் செய்துள்ளனர். அதன்படி ஜோபர்க் சூப்பர் கிங்ஸ், டர்பன்ஸ் சூப்பர் ஜெயண்ட்ஸ், பிரிட்டோரியா கேப்பிட்டல்ஸ், எம்ஐ கேப்டவுன், பார்ல் ராயல்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் ஆகிய 6 அணிகள் பங்கேற்றிருந்தன. இதன் முதலாவது சீசன் கடந்த ஆண்டு முடிவடைந்தது. அதில் சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் கோப்பையை வென்றது.

இந்த தொடரின் 2-வது சீசன் வரும் 10ம் தேதி தொடங்க உள்ளது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் நிர்வாகம் ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் என்ற பெயரில் அணியை வாங்கியுள்ளது. தென் ஆப்பிரிக்க அணியின் முன்னாள் கேப்டனும், சென்னை சூப்பர் கிங்ஸின் முன்னாள் வீரருமான பாப் டு பிளெஸ்சிஸ் அந்த அணிக்கு கேப்டனாக உள்ளார். இவரது தலைமையில் கடந்த வருடம் விளையாடிய ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணி பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்ற போதிலும் கோப்பையை வெல்ல முடியாமல் வெளியேறியது.

இந்நிலையில் 2011 - 2021 வரையிலான காலகட்டங்களில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் எம்எஸ் தோனி தலைமையில் விளையாடியதற்கு தாம் அதிர்ஷ்டம் செய்திருக்க வேண்டும் என்று டு பிளெஸ்சிஸ், தோனிக்கு புகழாரம் சூட்டியுள்ளார்.

மேலும் தோனியின் தலைமையில் விளையாடியபோது நிறைய அனுபவங்களை கற்றுக் கொண்டதாக தெரிவிக்கும் அவர் இது குறித்து பேசியது பின்வருமாறு;- "சென்னை அணியில் இளம் வீரராக இருந்தது மகத்தானதாக அமைந்தது. அங்கே எம்எஸ் தோனி மற்றும் ஸ்டீபன் பிளமிங் ஆகியோரிடமிருந்து நிறைய கற்றுக்கொண்டேன். அவர்களை போன்ற பெரிய வீரர்களிடமிருந்து நிறைய கற்றுக் கொள்ளலாம்.

தோனியை போன்ற மகத்தான கேப்டன்களின் கீழ் நீங்கள் விளையாடும்போது உங்களை நீங்கள் புரிந்து கொள்ள முடியும். அனைவரும் அழைப்பது போல தோனி கூலான கேப்டன். அவர் அழுத்தமான நேரங்களிலும் அமைதியாக இருப்பார். பொதுவாகவே நீங்கள் அழுத்தமான நேரங்களில் ரிலாக்ஸாக இருந்து பந்துவீச்சு கூட்டணியில் மாற்றங்களை செய்து பயன்படுத்துவது பெரிய வித்தியாசத்தை ஏற்படுத்தும். எனவே தோனி தலைமையில் விளையாடுவதற்கு நான் அதிர்ஷ்டம் செய்திருக்க வேண்டும்" என்று கூறினார்.

மேலும் செய்திகள்