இந்திய அணியை அதன் சொந்த மண்ணில் எதிர்கொள்வது சவாலானது- பேட் கம்மின்ஸ்
|உலகக்கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோத உள்ளன.
கொல்கத்தா,
ஐசிசி உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் வரும் 19ஆம் தேதி நடைபெற உள்ள இறுதிப்போட்டியில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோத உள்ளன. அதில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி சொந்த மண்ணில் தோல்வியை சந்திக்காமல் 10 தொடர் வெற்றிகளுடன் இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது.
பேட் கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி தொடக்கத்தில் 2 தோல்விகளை சந்தித்தாலும் பின்னர் எழுச்சிப்பெற்று வரிசையாக 8 வெற்றிகளை பதிவுசெய்து இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது. இந்த உலகக்கோப்பை தொடரின் லீக் சுற்றில் தங்களது முதல் ஆட்டத்தில் இவ்விரு அணிகளும் நேருக்கு நேர் சந்தித்தன. சென்னையில் நடைபெற்ற அந்த ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இந்திய அணி வெற்றி பெற்றது.
இந்நிலையில் இந்திய அணியை அதன் சொந்த மண்ணில் எதிர்கொள்வது சவாலானது என்று கூறும் ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான அரையிறுதி ஆட்டத்தில் வெற்றி பெற்ற பின் பேசுகையில்; 'இந்த ஆட்டத்தில் வெளியில் அமர்ந்திருப்பதை விட மைதானத்தில் நின்றது சற்று எளிதாக இருந்ததாக நினைக்கிறேன். ஆரம்பத்தில் இரண்டு மணி நேரம் சற்று கடினமாக இருந்தது. பின்னர் சிறப்பாக இலக்கை நோக்கி சென்றதாக நினைக்கிறேன். இந்த ஆட்டத்தில் ஸ்டார்க் மற்றும் ஹேசல்வுட் ஆகியோர் முன்கூட்டியே ஓவர்களை வீசுவார்கள் என்று நான் எதிர்பார்க்கவில்லை.
மேலும் இந்த மைதானம் நிச்சயம் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்கும் என்று நான் கணித்தேன். அதனால் இந்த மைதானத்தின் தன்மையை பொறுத்து முதலில் பந்து வீசுவதை நான் பெரிதாக நினைக்கவில்லை. இந்த ஆட்டத்தில் நாங்கள் மிகச்சிறப்பாக பீல்டிங் செய்துள்ளோம். ஆனால் இங்கு தொடரின் ஆரம்பத்தில் அதுபோன்று இல்லை. ஜோஷ் இங்கிலிஸ் அற்புதமாக பேட்டிங் செய்தார். டிராவிஸ் ஹெட் பேட்டிங் மற்றும் பவுலிங் என இரண்டிலுமே கை கொடுத்தார். எங்களில் சிலர் இதற்கு முன்னதாகவே உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் விளையாடியுள்ளோம். அதேபோன்று இன்னும் சிலர் டி20 உலகக்கோப்பையில் விளையாடியுள்ளோம். அதனால் இறுதிப்போட்டியை நினைத்து கவலை இல்லை.
இருப்பினும் இந்திய அணியை அதன் சொந்த மண்ணில் எதிர்கொள்வது சவாலானது. இந்திய அணிக்கு எதிரான இறுதிப்போட்டியில் மைதானம் முழுவதும் இந்திய ரசிகர்கள் நிறைந்திருப்பர். மைதானம் முழுவதும் இந்திய அணிக்கு மட்டுமே ஆதரவு இருக்கும். மேலும் 2015 ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் நான் விளையாடியது மிகவும் சிறப்பான ஒன்று. இதன் பின்னர் நான் இந்தியாவில் உலகக்கோப்பை இறுதி போட்டியில் விளையாடுவேனா என்று தெரியாது. ஆனால் தற்போது இந்த போட்டியை எதிர்நோக்கி காத்திருக்கிறேன்' என்று கூறியுள்ளார்.