< Back
கிரிக்கெட்
சவாலான சூழல்களை எதிர்கொண்டால், அது பெரிய போட்டிகளில் உதவியாக இருக்கும் - கேப்டன் பாண்டியா கருத்து
கிரிக்கெட்

சவாலான சூழல்களை எதிர்கொண்டால், அது பெரிய போட்டிகளில் உதவியாக இருக்கும் - கேப்டன் பாண்டியா கருத்து

தினத்தந்தி
|
4 Jan 2023 10:38 AM IST

சவாலான சூழல்களை எதிர்கொண்டால், அது பெரிய போட்டிகளில் உதவியாக இருக்கும் என்று கேப்டன் பாண்டியா கருத்து தெரிவித்துள்ளார்.

மும்பை,

இந்தியா- இலங்கை அணிகள் இடையிலான முதலாவது 20 ஓவர் போட்டி மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நேற்று நடைபெற்றது. இந்திய அணியில் கேப்டன் ரோகித் சர்மா, விராட் கோலி, லோகேஷ் ராகுல் ஆகியோருக்கு ஓய்வு கொடுக்கப்பட்டுள்ள நிலையில், ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா கேப்டனாக அணியை வழிநடத்தினார்.

இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 162 ரன்கள் அடித்தது. இந்திய அணியில் தீபக் ஹூடா(23 பந்துகள், 41 ரன்கள்), அக்ஸர் பட்டேல்(20 பந்துகள், 31 ரன்கள்) ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர்.

இதையடுத்து 163 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை அணி 20 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 160 ரன்கள் எடுத்தது. இதன் மூலம் இந்திய அணி 2 ரன்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது. இந்திய அணியில் ஷிவம் மாவி 4 விக்கெட்டுகளையும், உம்ரான் மாலிக் மற்றும் ஹர்ஷல் பட்டேல் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

இந்த நிலையில், இறுதி ஓவர் குறித்து கேப்டன் ஹர்திக் பாண்டியா கூறுகையில்,

"இலங்கை அணியை 2 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றோம். கடைசி பந்து வரை ஆட்டம் பரபரப்பாக இருந்தது. கடைசி ஓவரில் 13 ரன்கள் இலக்கு என்ற நிலையில், 11 ரன்கள் மட்டும் கொடுத்தார் அக்ஷர். சவாலான சூழ்நிலைகளை இந்த அணி எதிர்கொள்ள வேண்டும் என விரும்புகிறேன். இது பெரிய ஆட்டங்களில் அணிக்கு மிகவும் உதவியாக இருக்கும். இந்தியா வலுவாக உள்ள இருதரப்பு ஆட்டங்களில் முடிந்தவரை சவால்களை எதிர்கொண்டால் வீரர்களுக்கு நன்மை" என்று கூறினார்.

மேலும் செய்திகள்