அடுத்து வரும் ஒவ்வொரு ஆட்டமும் எங்களுக்கு அரையிறுதி போன்றது - பெங்களூரு பயிற்சியாளர் ஆன்டி பிளவர்
|10 அணிகள் கலந்து கொண்டுள்ள 17வது ஐ.பி.எல் கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் சிறப்பாக நடைபெற்று வருகிறது.
பெங்களூரு,
10 அணிகள் கலந்து கொண்டுள்ள 17வது ஐ.பி.எல் கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இதுவரை நடந்துள்ள லீக் ஆட்டங்களின் முடிவில் ராஜஸ்தான் ராயல்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ், சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் புள்ளிப்பட்டியலில் முதல் 4 இடங்களில் உள்ளன.
டு பிளெஸ்சிஸ் தலைமையிலான பெங்களூரு அணி இதுவரை 7 ஆட்டங்களில் ஆடி 1 வெற்றி, 6 தோல்வி கண்டு புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது. நேற்று முன்தினம் பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் நடந்த லீக் ஆட்டத்தில் ஐதராபாத் அணி 25 ரன் வித்தியாசத்தில் பெங்களூருவை வீழ்த்தியது.
7 ஆட்டங்களில் 6-ல் தோற்றுள்ள பெங்களூரு அணி எஞ்சிய 7 ஆட்டங்களிலும் வெற்றி பெற்றால் மட்டுமே பிளே-ஆப் சுற்று குறித்து நினைத்து பார்க்க முடியும். இது குறித்து பெங்களூரு அணியின் தலைமை பயிற்சியாளர் ஆன்டி பிளவர் அளித்த பேட்டியில் கூறியதாவது,
இந்த போட்டியில் நாங்கள் தோற்றாலும் வீரர்கள் போராடிய விதம் உண்மையிலேயே பெருமைப்பட வைக்கிறது. இனி எங்களுக்கு நாக்-அவுட்டுக்குரிய நேரம். அதாவது அடுத்து வரும் ஒவ்வொரு ஆட்டமும் எங்களுக்கு அரையிறுதியை போன்றது. எனவே நாங்கள் வலுவாக மீண்டு வருவது குறித்து சிந்திப்போம். இவ்வாறு அவர் கூறினார்.