அரையிறுதிக்கு பாகிஸ்தான் தகுதி பெற்றாலும் இந்தியாவுக்கு எதிராக வெற்றி பெற முடியாது- முகமது கைப்
|நடப்பு உலகக்கோப்பை தொடரில் இதுவரை இந்தியா, தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா அணிகள் அரையிறுதிக்கு முன்னேறி உள்ளன.
மும்பை,
10 அணிகள் கலந்து கொண்டுள்ள 50 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இதுவரை நடந்துள்ள லீக் ஆட்டங்களின் முடிவில் இந்தியா, தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா அணிகள் அரையிறுதிக்கு முன்னேறி உள்ளன. மீதமுள்ள ஒரு அரையிறுதி இடத்திற்கு நியூசிலாந்து, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், நெதர்லாந்து அணிகளுக்கு இடையே போட்டி நிலவுகிறது.
இதில் அரையிறுதி ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா அணி ஆஸ்திரேலியா அணியுடன் மோதுவது உறுதியாகியுள்ளது. இந்திய அணியுடன் மோதும் அணி இன்னும் முடிவாகவில்லை. அதில் அதிக ரன்ரேட்டை பெற்றுள்ள நியூசிலாந்து தங்களின் கடைசி ஆட்டத்தில் இலங்கையை தோற்கடித்தாலே இந்தியாவுடன் மோதுவதற்கு பிரகாசமான வாய்ப்புள்ளது. அதே சமயம் சமீபத்திய ஆட்டங்களில் சிறப்பாக செயல்பட்டு வரும் பாகிஸ்தான் அதிர்ஷ்டத்தின் உதவியுடன் அரையிறுதி செல்வதற்கான வாய்ப்பும் இருக்கிறது.
இந்நிலையில் அரையிறுதிக்கு வந்தாலும் இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தானால் வெல்ல முடியாது என்று இந்திய முன்னாள் வீரர் முகமது கைப் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் பேசியது பின்வருமாறு;- "பாகிஸ்தான் வந்தாலும் அது ஒருதலைப்பட்சமான ஆட்டமாகவே இருக்கும். ஏனெனில் வரலாற்று புத்தகத்தை நான் புரட்டியபோது அதில் அவர்களை இந்தியா எளிதாக தோற்கடித்துள்ளது. இதுவரை 8 முறை தோற்கடித்ததை போலவே இம்முறையும் இந்தியா ஒருதலைப்பட்சமாக பாகிஸ்தானை வீழ்த்தும். பாகிஸ்தானுக்கு இப்போதும் அரையிறுதி வாய்ப்பிருக்கிறது. இங்கிலாந்துக்கு எதிராக அவர்கள் நன்றாக விளையாடி பெரிய வெற்றியை பெற வேண்டும்" என்று கூறியுள்ளார்
முன்னதாக இந்த உலகக்கோப்பை தொடரின் லீக் ஆட்டத்தில் இந்திய அணி பாகிஸ்தானை வீழ்த்தி உலகக்கோப்பை வரலாற்றில் தொடர்ந்து 8வது முறையாக வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.