'கடைசி ஓவரில் 15 ரன்கள் தேவையாக இருந்தாலும் அடித்து இருப்பேன்' - ஹர்திக் பாண்ட்யா பேட்டி
|பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் கடைசி ஓவரில் வெற்றிக்கு 15 ரன்கள் தேவையாக இருந்தாலும் அடித்து இருப்பேன் என்று இந்திய அணியின் ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா தெரிவித்தார்.
துபாய்,
15-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி (20 ஓவர்) ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய் மற்றும் சார்ஜாவில் நடந்து வருகிறது. இதில் துபாயில் நேற்று முன்தினம் இரவு நடந்த 2-வது லீக் ஆட்டத்தில் இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் பரம எதிரியான பாகிஸ்தானை வீழ்த்தி போட்டியை வெற்றியுடன் தொடங்கியது.
முதலில் பேட் செய்த பாகிஸ்தான் அணி 19.5 ஓவர்களில் 147 ரன்னில் ஆல்-அவுட் ஆனது. அதிகபட்சமாக முகமது ரிஸ்வான் 43 ரன்கள் எடுத்தார். இந்திய அணி தரப்பில் புவனேஷ்வர் குமார் 4 விக்கெட்டும், ஹர்திக் பாண்ட்யா 3 விக்கெட்டும், அர்ஷ்தீப் சிங் 2 விக்கெட்டும் வீழ்த்தினர். பின்னர் ஆடிய இந்திய அணி 2 பந்துகள் மீதம் வைத்து இலக்கை எட்டிப்பிடித்தது. கடைசி ஓவரில் வெற்றிக்கு 7 ரன்கள் தேவையாக இருந்த நிலையில், 4-வது பந்தை ஹர்திக் பாண்ட்யா சிக்சருக்கு தூக்கி ஆட்டத்தை அமர்க்களமாக முடித்தார். ஆட்டம் இழக்காமல் 33 ரன்கள் (17 பந்து, 4 பவுண்டரி, ஒரு சிக்சர்) எடுத்ததுடன், 3 விக்கெட்டும் சாய்த்த ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா ஆட்டநாயகன் விருது பெற்றார்.
ஆட்டநாயகன் விருது பெற்ற ஹர்திக் பாண்ட்யா கூறுகையில், 'இதுபோன்று இலக்கை விரட்டிப்பிடிக்கையில் (சேசிங்) ஒவ்வொரு ஓவர், ஓவராக திட்டமிட்டு செயல்பட வேண்டும். கடைசி ஓவரை சுழற்பந்து வீச்சாளர் முகமது நவாஸ் வீசுவார் என்பது தெரியும். கடைசி ஓவரில் எங்களது வெற்றிக்கு 7 ரன்கள் மட்டுமே தேவையாக இருந்தது. ஒருவேளை வெற்றிக்கு 15 ரன்கள் தேவையாக இருந்திருத்தாலும் அதனை அடித்து இருப்பேன்.
கடைசி ஓவரில் பவுலர் அதிக அழுத்தத்தில் இருப்பதை அறிந்தேன். இறுதி ஓவரில் எனக்கு ஒரே ஒரு சிக்சர் மட்டுமே தேவைப்பட்டது. பாகிஸ்தான் அணி 10 பீல்டர்களை பவுண்டரி எல்லையில் நிறுத்தி இருந்தாலும் நான் சிக்சர் விளாசி இருப்பேன். பந்து வீச்சை பொறுத்தமட்டில் சூழ்நிலையையும், ஆடுகளத்தையும் புரிந்து அதற்கு தகுந்தபடி பவுலிங் செய்ய வேண்டியது முக்கியமானதாகும். பந்து வீச்சில் எனது பலமான ஷாட் பிட்ச் பந்துவீசி பேட்ஸ்மேன்களை தவறிழைக்க வைக்க முயற்சித்தேன்' என்றார்.
வெற்றிக்கு பிறகு இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா பேசுகையில், 'இலக்கை விரட்டிபிடிக்கையில் பாதியை கடந்த பிறகு கடினமான சூழ்நிலை நிலவினாலும் எங்களால் இலக்கை எட்ட முடியும் என்ற நம்பிக்கை இருந்தது. நம்பிக்கை இருக்கும் பட்சத்தில் இதுபோன்ற விஷயங்கள் சாத்தியமாகும்.
ஒவ்வொரு வீரரும் தங்கள் பணியை சிறப்பான செய்தனர். கடந்த ஒரு ஆண்டாக வேகப்பந்து வீச்சாளர்கள் மிகவும் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்கள். சில சமயங்களில் நாங்கள் சவாலுக்கு உள்ளானோம். ஆனால் அந்த சவால்களை எல்லாம் கடந்து முன்னோக்கி பயணிக்கிறோம். காயத்தில் இருந்து மீண்டு அணிக்கு திரும்பிய பிறகு ஹர்திக் பாண்ட்யா அருமையாக செயல்படுகிறார். அவர் அணியில் இல்லாத சமயத்தில் தனது உடல் தகுதியை சரியாக வலுப்படுத்தி தற்போது மணிக்கு 140 கிலோ மீட்டருக்கு மேலான வேகத்தில் எளிதாக பந்து வீசுகிறார். அவரது பேட்டிங் திறமை அருமையானது என்பது எங்களுக்கு தெரியும்.
அவர் பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் என்ன செய்ய வேண்டும் என்பதை புரிந்து கொண்டு நிதானமாகவும் அதிக தன்னம்பிக்கையுடனும் செயல்படுகிறார். ஷாட் பிட்ச் உள்ளிட்ட பந்து வீச்சிலும் அவர் வேகமாக செயல்பட்டார். ஒரு ஓவருக்கு 10 ரன்கள் தேவை என்ற நெருக்கடியான சூழ்நிலையிலும் அவர் பதற்றமின்றி சிறப்பாக பேட்டிங் செய்தார்' என்று தெரிவித்தார்.
தோல்வி குறித்து பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் கூறுகையில், 'நாங்கள் 10-15 ரன்கள் குறைவாக எடுத்து விட்டோம். எங்களது கடைசி கட்ட வீரர்கள் அணிக்கு பயனளிக்கும் வகையில் ரன் சேர்த்தனர். பந்து வீச்சில் நாங்கள் சிறப்பான தொடக்கம் கண்டோம். எங்களது பந்து வீச்சாளர்களின் செயல்பாடு பாராட்டுக்குரியது. எதிரணிக்கு நெருக்கடி கொடுத்து வீழ்த்த வேண்டும் என்ற நோக்கில் தான் இடக்கை சுழற்பந்து வீச்சாளரான முகமது நவாஸ்சை கடைசி ஓவரை வீச வைத்தோம்.
ஆனால் ஹர்திக் பண்ட்யா அபாரமாக செயல்பட்டு ஆட்டத்தை வெற்றிகரமாக முடித்தார். ஆனால் நாங்கள் வெற்றி பெற முடியாமல் போனது துரதிருஷ்டவசமானதாகும். அறிமுக இளம் வேகப்பந்து வீச்சாளரான நசீம் ஷா 2 விக்கெட்டுகள் வீழ்த்தியதுடன் சிறப்பாகவும், ஆக்ரோஷமாகவும் செயல்பட்டார்' என்றார்.
26 ரன்கள் விட்டுக்கொடுத்து கேப்டன் பாபர் அசாம் உள்பட 4 விக்கெட்டுகள் கைப்பற்றி கலக்கிய இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர் குமார் அளித்த பேட்டியில், 'எங்களது இன்னிங்சில் 10 ஓவர்களுக்கு பிறகு போட்டி கடினமாகவே இருந்தது. அந்த தருணத்தில் ஆட்டத்தின் முடிவு எந்தபக்கமும் போகலாம் என்பது போல் தான் இருந்தது. உண்மையை சொல்லப்போனால் இரு அணியினருக்கும் வெற்றி வாய்ப்பு 50-50 சதவீதமாக இருந்தது.
ஹர்திக், ஜடேஜா சிறப்பாக பேட்டிங் செய்தனர். ஹர்திக் ரன்கள் எடுக்க வேண்டும் என்று நாங்கள் பிரார்த்தனை செய்தோம். ஹர்திக் இதுபோன்று தொடர்ந்து சிறப்பாக செயல்படுவதுடன் 20 ஓவர் உலக கோப்பை போட்டியிலும் நல்ல பார்மில் நீடிக்க வேண்டும் என்று பிரார்த்திக்கிறேன். விக்கெட் வீழ்த்தியது மட்டுமின்றி எனது செயல்பாடு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. மற்ற பவுலர்களும் நன்றாக பந்து வீசினர். அணியின் ஒட்டுமொத்த செயல்பாடு வெற்றிக்கு காரணம் என்று கருதுகிறேன். பாபர் அசாம் ஆட்டமிழந்ததும் அவர்களது பேட்டிங் திட்டம் சீர்குலையும் என்பது எங்களுக்கு தெரியும்.
நாங்கள் முதலில் பவுலிங்கை தேர்வு செய்தது நல்ல முடிவாகும். ஆடுகளத்தில் புல்கள் இருந்ததால் பேட்டிங்குக்கு சாதகமாக இருக்காது என்று நினைத்து பவுலிங்கை தேர்வு செய்தோம். கடந்த ஆண்டு நாங்கள் பாகிஸ்தான் அணியிடம் கண்ட தோல்வி குறித்து நினைக்கவில்லை. ஒரு கிரிக்கெட் வீரராக நாங்கள் ஆட்டத்தின் முடிவு குறித்து அதிகம் சிந்திப்பதில்லை. அதேநேரத்தில் மக்கள் தங்களது எதிர்பார்ப்பை வைத்து இருப்பார்கள் என்பது தெரியும்' என்று தெரிவித்தார்.