இங்கிலாந்தின் அதிர்ச்சி தோல்வியால் உலகக் கோப்பை புள்ளி பட்டியலில் அதிரடி மாற்றங்கள்- முழு விவரம்
|இதனால் இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான போட்டி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
மெல்போர்ன்,
டி20 உலகக்கோப்பை தொடரில் இங்கிலாந்து அணியை வீழ்த்தி அயர்லாந்து அணி ரசிகர்களுக்கு ஆச்சரியம் கொடுத்துள்ளது. குரூப் ஏ பிரிவில் இரு அணிகளும் மோதிய இந்த போட்டி மெல்பேர்னில் உள்ள மைதானத்தில் இன்று நடைபெற்றது.
இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி கேப்டன் ஜாஸ் பட்லர் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி முதலில் பேட்டிங் செய்த அயர்லாந்து அணி 19.2 ஓவர்களில் 157 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது.
இங்கிலாந்து இன்னிங்சின் போது மழைக்குறுக்கிட்டதால் டி.ஆர்.எஸ் விதிப்படி இங்கிலாந்து 14.3 ஓவர்களில் 111 ரன்களை எடுக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டது. இங்கிலாந்து வீரர்கள் வெற்றிக்காக போராடிய போதும் அந்த அணியால் 14.3 ஓவர்களில் 105/5 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதனால் 5 ரன்கள் வித்தியாசத்தில் அயர்லாந்து வெற்றி கண்டது.
இதை தொடர்ந்து சூப்பர்12 சுற்றில் இன்று நடைபெற இருந்த 2-வது போட்டியில் நியூசிலாந்து-ஆப்கானிஸ்தான் அணிகள் மோத இருந்தன. மெல்போர்னில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் இந்த போட்டி ரத்து செய்யப்பட்டு இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளிகள் வழங்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் அயர்லாந்து அணியின் ஆச்சரிய வெற்றி, மற்றும் நியூசிலாந்து- ஆப்கானிஸ்தான் போட்டி ரத்து போன்றவற்றால் உலகக் கோப்பை புள்ளிபட்டியலில் அதிரடி மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது. அதன்படி குரூப் 1 பிரிவில் நியூசிலாந்து அணி 1 வெற்றி மற்றும் 1 முடிவு இல்லாத போட்டியின் காரணத்தால் 3 புள்ளிகளுடன் முதல் இடத்தில் உள்ளது.
ஒரு வெற்றி ஒரு தோல்வி என இந்த பட்டியலில் இலங்கை அணி 2-வது இடத்திலும், இங்கிலாந்து அணி 3-வது இடத்திலும் அயர்லாந்து அணி 4-வது இடத்திலும், ஆஸ்திரேலியா அணி 5-வது இடத்திலும் உள்ளது. 1 புள்ளியுடன் இந்த குரூப் 1 புள்ளி பட்டியலில் ஆப்கானிஸ்தான் கடைசி இடத்தில் உள்ளது.
குரூப் பி பிரிவில் வங்காளதேச அணி ரன்ரேட் அடிப்படையில் 2 புள்ளிகளுடன் முதல் இடத்தில் உள்ளது. இந்திய அணி அதே 2 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது. 1 புள்ளியுடன் தென் ஆப்பிரிக்கா மற்றும் ஜிம்பாப்வே அணி அடுத்தடுத்த இடங்களில் உள்ளன. ஒரு புள்ளியை கூட பெறாத பாகிஸ்தான் அணி 5-வது இடத்திலும், நெதர்லாந்து அணி கடைசி இடத்திலும் உள்ளது.
இரண்டு குரூப்களிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணி அரையிறுதிக்கு தகுதி பெறும். குரூப் 1 பிரிவில் நியூசிலாந்து அணி தற்போது முதல் இடத்தில் உள்ளது. இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் ஏற்கனவே ஒரு தோல்வியை சந்தித்து விட்டன.
இதனால் நாளை மறுதினம் நடைபெற இருக்கும் இங்கிலாந்து- மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான போட்டி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இந்த போட்டியில் ஒருவேளை இங்கிலாந்து அணி தோல்வி அடைந்தால் அதன்பிறகு நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டி இங்கிலாந்து அணிக்கு வாழ்வா? சாவா ஆட்டமாக மாறலாம்.