பாகிஸ்தான் மண்ணில் தொடரை கைப்பற்றிய இங்கிலாந்து அணி....!
|பாகிஸ்தானுக்கு எதிரான கடைசி டி20 போட்டியில் 67 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது.
லாகூர்,
பாகிஸ்தான் சுற்றுப்பயணம் மேற்க்கொண்டுள்ள இங்கிலாந்து அணி அங்கு 7 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது. இத்தொடரில் இதுவரை வந்த 6 போட்டிகள் முடிவில் இரு அணிகளும் தலா 3 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளனர். இந்நிலையில் தொடர் யாருக்கு என தீர்மானிக்கும் கடைசி டி20 போட்டி இன்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
அதன்படி இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் ஆடியது. இங்கிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரகளாக பில் சால்ட் மற்றும் ஹேலஸ் ஆகியோர் களம் இறங்கினர். இவர்களில் பில் சால்ட் 20 ரன்னுக்கும், ஹேலஸ் 18 ரன்னுக்கும் அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர். இதையடுத்து டேவிட் மலான் மற்றும் பென் டக்கட் ஆகியோர் ஜோடி சேர்ந்தனர். இவர்கள் இருவரும் அதிரடியாக ஆடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.
அதிரடியாக ஆடிய மலான் அரைசதம் அடித்தார். இந்நிலையில் டக்கட் 30 ரன்களில் ஆட்டம் இழந்தார். அடுத்து ஹாரி புரூக் களம் புகுந்தார். இறுதியில் இங்கிலாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 209 ரன்கள் குவித்தது.
இதையடுத்து 210 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கியது. பாகிஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக கேப்டன் பாபர் ஆசம், விக்கெட் கீப்பர் ரிஸ்வான் ஆகியோர் களம் புகுந்தனர்.
கடந்த ஆட்டங்களில் மிகச்சிறப்பாக ஆடிய இவர்கள் இந்த ஆட்டத்தில் ரிஸ்வான் 1 ரன்னுக்கும், பாபர் ஆசம் 4 ரன்னுக்கும் அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர். இதையடுத்து 3 வது விக்கெட்டுக்கு ஷான் மசூத், இப்டிகார் அகமது ஆகியோர் ஜோடி சேர்ந்தனர். இதில் அகமது 19 ரன்னுக்கும், குஷ்தில் ஷா 27 ரன்னுக்கும், ஆசிப் அலி 7 ரன்னுக்கும் ஆட்டம் இழந்தனர்.
இதையடுத்து முகமது நவாஸ் ஷான் மசூத்துடன் ஜோடி சேர்ந்தார். அதிரடியாக ஆடிய ஷான் மசூத் அரைசதம் அடித்த நிலையில் 56 ரன்களுக்கு ஆட்டம் இழந்தார்.
இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் பாகிஸ்தான் அணி 8 விக்கெட் இழப்புக்கு 142 ரன்களே அடித்தது. இதையடுத்து 67 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தி இங்கிலாந்து அணி அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் பாகிஸ்தானுக்கு எதிரான 7 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 4-3 என்ற கணக்கில் இங்கிலாந்து அணி கைப்பற்றி அசத்தியது.