3-வது ஒரு நாள் கிரிக்கெட்: 181 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து வெற்றி
|நியூசிலாந்துக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட்டில் இங்கிலாந்து வீரர் பென் ஸ்டோக்ஸ் 182 ரன் குவித்து சாதனை படைத்தார்.
லண்டன்,
இங்கிலாந்து - நியூசிலாந்து அணிகள் இடையிலான 3-வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி லண்டன் ஓவலில் நேற்று பகல்-இரவு மோதலாக நடந்தது. 'டாஸ்' ஜெயித்த நியூசிலாந்து கேப்டன் டாதம் லாதம் முதலில் இங்கிலாந்தை பேட்டிங் செய்ய பணித்தார். இதையடுத்து பேட்டிங்கை தொடங்கிய இங்கிலாந்துக்கு தொடக்கம் அதிர்ச்சியாக அமைந்தது.
பேர்ஸ்டோ (0), ஜோ ரூட் (4 ரன்) இருவரையும் வேகப்பந்து வீச்சாளர் டிரென்ட் பவுல்ட் காலி செய்தார். இதன் பின்னர் டேவிட் மலானும், ஆல்-ரவுண்டர் பென் ஸ்டோக்சும் இணைந்து அணியை சரிவில் இருந்து காப்பாற்றியதுடன் அதிரடியில் வெளுத்து வாங்கினர். ஆடுகளம் பேட்டிங்குக்கு நன்கு ஒத்துழைத்ததால் சகட்டுமேனிக்கு சிக்சரும், பவுண்டரியும் ஓடின. மலான் 96 ரன்களில் ஆட்டமிழந்தார்.
மறுமுனையில் 76 பந்துகளில் தனது 4-வது சதத்தை பூர்த்தி செய்த பென்ஸ்டோக்ஸ் தொடர்ந்து ரன்வேட்டையாடினார். இரட்டை செஞ்சுரியை நோக்கி வேகமாக பயணித்தார். 45-வது ஓவரில் பென் லிஸ்டர் வீசிய புல்டாசை வித்தியாசமாக தட்டிவிட்ட போது பென் ஸ்டோக்ஸ் கேட்ச் ஆனார். அவர் 182 ரன்களில் (124 பந்து, 15 பவுண்டரி, 9 சிக்சர்) வெளியேறினார். இங்கிலாந்து வீரர்களில் இதுவரை யாரும் இரட்டை சதம் அடித்ததில்லை. அந்த அரிய வாய்ப்பை கோட்டை விட்டாலும் ஒரு நாள் கிரிக்கெட்டில் இங்கிலாந்து வீரர்களில் அதிக ரன் விளாசியவர் என்ற சாதனை அவர் வசம் சென்றது. இதற்கு முன்பு ஜாசன் ராய் 2018-ம் ஆண்டு மெல்போர்னில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 180 ரன்கள் எடுத்ததே அதிகபட்சமாக இருந்தது.
பின்வரிசை வீரர்களில் யாரும் ஜொலிக்கவில்லை. இங்கிலாந்து அணி 48.1 ஓவர்களில் 368 ரன்கள் சேர்த்து ஆல்-அவுட் ஆனது. டிரென்ட் பவுல்ட் 5 விக்கெட்டுகளை சாய்த்தார்.
அடுத்து 367 ரன் இலக்கை நோக்கி நியூசிலாந்து அணி ஆடியது. இங்கிலாந்து அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் சீரான இடைவெளியில் நியூசிலாந்து வீரர்கள் ஆட்டமிழந்து வெளியேறினர். அந்த அணியில் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய கிளன் பிலிப்ஸ் 72 (76) ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
முடிவில் நியூசிலாந்து அணி 39 ஒவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 187 ரன்கள் மட்டுமே எடுத்தது. இங்கிலாந்து அணியின் சார்பில் அதிகபட்சமாக கிரிஸ் வோக்ஸ் மற்றும் லிவிங்ஸ்டன் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளும், டாப்லி 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.
இதன்மூலம் நியூசிலாந்துக்கு எதிரான 3-வது ஒரு நாள் கிரிக்கெட்டில் 181 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி அபார வெற்றிபெற்றது. இதனைத்தொடர்ந்து 4 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் போட்டி தொடரில் 2-1 என்ற கணக்கில் இங்கிலாந்து அணி முன்னிலை பெற்றுள்ளது.