இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 353 ரன்களுக்கு ஆல்-அவுட்
|இந்தியாவுக்கு எதிரான 4-வது டெஸ்டில் இங்கிலாந்து வீரர் ஜோ ரூட் 122 ரன்களுடன் கடைசிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார்.
ராஞ்சி,
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வரும் இங்கிலாந்து கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. முதல் டெஸ்டில் இங்கிலாந்தும், அடுத்து இரு டெஸ்டுகளில் இந்தியாவும் வெற்றி பெற்றன. இதனால் தொடரில் இந்தியா 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
இந்த நிலையில் இவ்விரு அணிகள் இடையிலான 4-வது டெஸ்ட் போட்டி ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் நேற்று தொடங்கியது. இந்திய அணியில் ஒரே மாற்றமாக ஓய்வு அளிக்கப்பட்ட ஜஸ்பிரித் பும்ராவுக்கு பதிலாக புதுமுக வேகப்பந்து வீச்சாளர் ஆகாஷ் தீப் இடம் பிடித்தார். இங்கிலாந்து அணியில் ரெஹான் அகமது, மார்க்வுட் கழற்றிவிடப்பட்டு அவர்களது இடத்தில் சோயிப் பஷீர், ஆலி ராபின்சன் சேர்க்கப்பட்டனர்.
'டாஸ்' ஜெயித்த இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் தயக்கமின்றி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார். இதன்படி ஜாக் கிராவ்லியும், பென் டக்கெட்டும் இங்கிலாந்தின் தொடக்க ஆட்டக்காரர்களாக அடியெடுத்து வைத்தனர். கிராவ்லிக்கு 4 ரன்னில் ஆகாஷ் தீப்பின் பந்து வீச்சில் ஸ்டம்பு பல்டி அடித்தது. ஆனால் ஆகாஷ் நோ-பாலாக வீசியது தெரியவந்ததால் கண்டம் தப்பிய கிராவ்லி அதன் பிறகு அதிரடியாக ஆடினார்.
முகமது சிராஜின் ஒரே ஓவரில் 3 பவுண்டரி, ஒரு சிக்சர் சாத்தினார். முதல் 9 ஓவர்களில் 46 ரன்கள் திரட்டிய இந்த ஜோடியை அறிமுக வேகப்பந்து வீச்சாளர் ஆகாஷ் தீப் பிரித்தார். அவரது பந்தில் டக்கெட் (11 ரன்) விக்கெட் கீப்பர் ஜூரெலிடம் கேட்ச் ஆனார். 2-வது விக்கெட்டுக்கு இறங்கிய ஆலி போப் (0) அதே ஓவரில் எல்.பி.டபிள்யூ. ஆனார். மற்றொரு தொடக்க வீரர் கிராவ்லியையும் (42 ரன், 42 பந்து, 6 பவுண்டரி, ஒரு சிக்சர்) ஆகாஷ் காலி செய்ய இங்கிலாந்து நிலைகுலைந்தது.
4-வது விக்கெட்டுக்கு ஜோ ரூட்டும், ஜானி பேர்ஸ்டோவும் இணைந்து ஓரளவு சரிவில் இருந்து மீட்டனர். ஸ்கோர் 109-ஐ எட்டிய போது பேர்ஸ்டோ (38 ரன், 35 பந்து, 4 பவுண்டரி, ஒரு சிக்சர்) அஸ்வின் வீசிய சுழற்பந்தை முட்டிப்போட்டு விரட்ட முயற்சித்து துல்லிய தாக்குதலில் எல்.பி.டபிள்யூ. ஆனார்.
இதைத் தொடர்ந்து நுழைந்த கேப்டன் பென் ஸ்டோக்சுக்கு (3 ரன்) சுழற்பந்து வீச்சாளர் ஜடேஜா 'செக்' வைத்தார். பிட்ச்சாகி அதிகம் எழும்பாத அந்த பந்து கணுக்கால் உயரத்துக்கு வந்தபடி அவரது காலில் பட்டது. எல்.பி.டபிள்யூ. கேட்டு இந்திய வீரர்கள் அப்பீல் செய்ததும் நடுவர் விரலை உயர்த்தி விட்டார். ஒரு கனம் திகைத்து நின்ற ஸ்டோக்ஸ் ஏமாற்றத்தோடு நடையை கட்டினார்.
மதிய உணவு இடைவேளையின் போது இங்கிலாந்து 112 ரன்னுக்குள் 5 விக்கெட்டுகளை பறிகொடுத்து தள்ளாடியது.
இந்த நெருக்கடியான சூழலில் 6-வது விக்கெட்டுக்கு முன்னாள் கேப்டன் ஜோ ரூட்டுடன், விக்கெட் கீப்பர் பென் போக்ஸ் கைகோர்த்தார். 'பாஸ்பால்' என்ற அதிரடி ஜாலத்தை ஒதுக்கி வைத்து விட்டு டெஸ்ட் கிரிக்கெட்டுக்குரிய நிதானத்தை கடைபிடித்தனர். அடுத்த 13 ஓவர்களில் பந்து எல்லைக்கோடு பக்கமே செல்லவில்லை. இவர்களின் நிதானம் இங்கிலாந்தை சிக்கலில் இருந்து மீட்டது.
தங்களை வலுவாக நிலை நிறுத்திக் கொண்ட பிறகு ரன் சேகரிப்பில் துரிதம் காட்டினர். நீண்ட நேரம் குடைச்சல் கொடுத்த இந்த கூட்டணியை ஒரு வழியாக வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜ் உடைத்தார். அவரது பந்தில் பென் போக்ஸ் 47 ரன்னில் (126 பந்து, 4 பவுண்டரி, ஒரு சிக்சர்) ஆட்டமிழந்தார். ரூட்- போக்ஸ் ஜோடியினர் 6-வது விக்கெட்டுக்கு 113 ரன்கள் சேர்த்தனர். அடுத்து வந்த டாம் ஹார்ட்லீ 13 ரன்னில் வீழ்ந்தார். பின்னர் ஆலி ராபின்சன் களம் புகுந்தார்.
இன்னொரு பக்கம் நிலைத்து நின்று சாதுர்யமாக செயல்பட்டு அணியை காப்பாற்றிய ஜோ ரூட் பவுண்டரி அடித்து தனது 31-வது சதத்தை நிறைவு செய்தார். முந்தைய 3 டெஸ்டில் 30 ரன்னை கூட தாண்டாத ரூட் தன் மீதான விமர்சனங்களுக்கு பேட்டால் பதிலடி கொடுத்துள்ளார். அவருக்கு ஆலி ராபின்சன் கடைசி கட்டத்தில் நன்கு ஒத்துழைப்பு தந்ததுடன், இவர்கள் மேற்கொண்டு 14 ஓவர்களை திறம்பட சமாளித்தனர்.
ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 90 ஓவர்களில் 7 விக்கெட்டுக்கு 302 ரன்கள் எடுத்திருந்தது. ஜோ ரூட் 106 ரன்களுடனும், ஆலி ராபின்சன் 31 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.
இந்நிலையில் இன்று 2-வதுநாள் ஆட்டம் தொடங்கியது. அப்போது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த ஆலி ராபின்சன் தனது அரை சதத்தினை பூர்த்தி செய்திருந்தநிலையில் 58 ரன்களுக்கு கேட்ச் ஆனார். அவரைத்தொடர்ந்து களமிறங்கிய வீரர்கள் ரன் ஏதும் எடுக்காமல் வெளியேறினர். மறுமுனையில் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜோ ரூட் 122 ரன்களுடன் கடைசிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார்.
இதனையடுத்து முதல் இன்னிங்சில் இங்கிலாந்து அணி 104.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 353 ரன்கள் எடுத்தது. இந்திய அணியின் சார்பில் சிறப்பாக பந்துவீசிய ஜடேஜா 4 விக்கெட்டும், ஆகாஷ் தீப் 3 விக்கெட்டும், முகமது சிராஜ் 2 விக்கெட்டும், அஸ்வின் ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர்.
இதனைத்தொடர்ந்து இந்திய அணி தனது முதல் இன்னிங்சை தொடங்கியது. ஆரம்பமே அதிர்ச்சி அளிக்கும் வகையில் ஜேம்ஸ் ஆண்டர்சன் பந்துவீச்சில் கேப்டன் ரோகித் சர்மா 2 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். தொடர்ந்து இந்திய அணியின் சார்பில் ஜெய்ஸ்வால் மற்றும் சுப்மன் கில் ஆகியோர் விளையாடி வருகின்றனர்.