< Back
கிரிக்கெட்
ஆஷஸ் கிரிக்கெட்: இங்கிலாந்து அணியின் அதிரடி தொடருமா? 4-வது டெஸ்ட் இன்று தொடக்கம்

Image courtesy: EnglandCrickettwitter

கிரிக்கெட்

ஆஷஸ் கிரிக்கெட்: இங்கிலாந்து அணியின் அதிரடி தொடருமா? 4-வது டெஸ்ட் இன்று தொடக்கம்

தினத்தந்தி
|
19 July 2023 5:18 AM IST

இங்கிலாந்து- ஆஸ்திரேலியா மோதும் ஆஷஸ் 4-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஓல்டு டிராப்போர்டில் இன்று தொடங்குகிறது.

மான்செஸ்டர்,

இங்கிலாந்து- ஆஸ்திரேலியா மோதும் ஆஷஸ் 4-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஓல்டு டிராப்போர்டில் இன்று தொடங்குகிறது. முந்தைய டெஸ்டில் மிரட்டிய இங்கிலாந்தின் அதிரடி பாணி தொடருமா? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

ஆஷஸ் கிரிக்கெட்

கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. அனல் பறக்கும் இந்த தொடரில் முதல் இரு டெஸ்டில் ஆஸ்திரேலியாவும், திரில்லிங்கான 3-வது டெஸ்டில் இங்கிலாந்தும் வெற்றியை ருசித்தன. தொடரில் ஆஸ்திரேலியா 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இந்த நிலையில் இவ்விரு அணிகள் இடையிலான 4-வது டெஸ்ட் போட்டி மான்செஸ்டரில் உள்ள ஓல்டு டிராப்போர்டில் இன்று (புதன்கிழமை) தொடங்குகிறது.

டெஸ்ட் கிரிக்கெட்டையும் அதிரடி களமாக மாற்றி வரும் இங்கிலாந்து அணி முதல் இரு டெஸ்டில் நெருங்கி வந்து தோற்றது. லீட்சில் நடந்த பரபரப்பான 3-வது டெஸ்டில் 252 ரன்கள் இலக்கை 50 ஓவர்களில் எட்டிப்பிடித்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி கண்டது. ஹாரி புரூக்கின் அரைசதம் (75 ரன்) வெற்றிக்கு உதவியது. பந்து வீச்சில் மார்க்வுட் மொத்தம் 7 விக்கெட்டுகளை வீழ்த்தி அமர்க்களப்படுத்தினார். இதே உத்வேகத்துடன் 4-வது டெஸ்டிலும் களம் இறங்குவார்கள். அணியில் ஒரே ஒரு மாற்றமாக ஆலி ராபின்சனுக்கு பதிலாக மூத்த வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் மீண்டும் சேர்க்கப்பட்டு உள்ளார். அவர் அணியில் இடத்தை தக்கவைக்க இந்த போட்டியில் சாதிக்க வேண்டியது அவசியமாகும். இதே போல் 6 இன்னிங்சில் வெறும் 141 ரன் மட்டுமே எடுத்துள்ள ஜானி பேர்ஸ்டோவும் பார்முக்கு திரும்ப வேண்டிய நெருக்கடியில் இருக்கிறார்.



சுழற்பந்து வீச்சாளர் இல்லை

ஆஸ்திரேலிய அணியில் காயத்தால் கடந்த டெஸ்டில் ஆல்-ரவுண்டர் கேமரூன் கிரீனுக்கு ஓய்வு அளிக்கப்பட்டது. அவருக்கு பதிலாக கிட்டத்தட்ட 4 ஆண்டுக்கு பிறகு டெஸ்ட் அணியில் கால்பதித்த மிட்செல் மார்ஷ் சதம் அடித்து கவனத்தை ஈர்த்தார். இப்போது கேமரூன் கிரீனும் காயத்தில் இருந்து குணமடைந்து உடல்தகுதியை எட்டி விட்டார். இதனால் யாரை சேர்ப்பது? யாரை விடுவது? என்பதில் அணி நிர்வாகத்துக்கு குழப்பம் ஏற்பட்டது.

இந்த ஆடுகளம் வேகப்பந்து வீச்சுக்கு உகந்தது என்பதால் சுழற்பந்து வீச்சாளர் டாட் மர்பியை கழற்றி விட்டு அவருக்கு பதிலாக கேமரூன் கிரீனை சேர்ப்பது என்று அணி நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இதனால் 10 ஆண்டுக்கு பிறகு ஆஸ்திரேலியா பிரதான சுழற்பந்து வீச்சாளர் இன்றி டெஸ்டில் களம் இறங்குகிறது. அதே சமயம் பார்மின்றி தவிக்கும் தொடக்க ஆட்டக்காரர் டேவிட் வார்னருக்கு இன்னொரு வாய்ப்பு வழங்கப்படுகிறது.

மற்றபடி இரு அணிகளும் சரிசம பலத்துடன் மல்லுகட்டுவதால் ரசிகர்களின் எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. இன்றைய டெஸ்டில் ஆஸ்திரேலியா வாகை சூடினால் 22 ஆண்டுக்கு பிறகு இங்கிலாந்து மண்ணில் ஆஷஸ் தொடரை கைப்பற்றி விடும். ஆனால், அவர்களின் சாதனை பயணத்துக்கு முட்டுக்கட்டை போட இங்கிலாந்து வரிந்து கட்டுவதால் களத்தில் ஆக்ரோஷத்துக்கு பஞ்சமிருக்காது.



போட்டி நடக்கும் ஓல்டு டிராப்போர்டு மைதானத்தில் ஆஸ்திரேலிய அணி இதுவரை 31 டெஸ்டில் விளையாடி 9-ல் வெற்றியும், 7-ல் தோல்வியும், 15-ல் டிராவும் கண்டுள்ளது.

பிற்பகல் 3.30 மணிக்கு...

போட்டிக்கான இரு அணி வீரர்கள் வருமாறு:-

இங்கிலாந்து: பென் டக்கெட், ஜாக் கிராவ்லி, ஹாரி புரூக், ஜோ ரூட், ஜானி பேர்ஸ்டோ, பென் ஸ்டோக்ஸ் (கேப்டன்), மொயீன் அலி, கிறிஸ் வோக்ஸ், மார்க்வுட், ஸ்டூவர்ட் பிராட், ஜேம்ஸ் ஆண்டர்சன்.

ஆஸ்திரேலியா: உஸ்மான் கவாஜா, வார்னர், லபுஸ்சேன், ஸ்டீவன் சுமித், டிராவிஸ் ஹெட், அலெக்ஸ் கேரி, மிட்செல் மார்ஷ், கேமரூன் கிரீன். மிட்செல் ஸ்டார்க், கம்மின்ஸ் (கேப்டன்), ஹேசில்வுட்.

இந்திய நேரப்படி பிற்பகல் 3.30 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை சோனி ஸ்போர்ட்ஸ் டென்5 சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.

மேலும் செய்திகள்