இங்கிலாந்து- ஆஸ்திரேலியா மோதும் ஆஷஸ் டெஸ்ட்: இன்று 4ம் நாள் ஆட்டம்
|இங்கிலாந்துக்கு எதிரான ஆஷஸ் டெஸ்டில் ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 386 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது.
பர்மிங்காம்,
ஆஷஸ் டெஸ்ட்
இங்கிலாந்து - ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான ஆஷஸ் தொடரின் முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி பர்மிங்காமில் நடந்து வருகிறது. 'டாஸ்' ஜெயித்து அதிரடியாக முதலில் மட்டையை சுழற்றிய இங்கிலாந்து அணி ஒரே நாளில் 78 ஓவர்களில் 8 விக்கெட்டுக்கு 393 ரன்கள் குவித்து 'டிக்ளேர்' செய்தது. பின்னர் தனது முதல் இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலியா 2-வது நாள் முடிவில் 5 விக்கெட்டுக்கு 311 ரன்கள் எடுத்திருந்தது. இங்கிலாந்தில் முதல்முறையாக சதம் அடித்த உஸ்மான் கவாஜா 126 ரன்களுடனும், அலெக்ஸ் கேரி 52 ரன்களுடனும் அவுட் ஆகாமல் இருந்தனர்.
இந்த நிலையில் 3-வது நாளான நேற்று ஆஸ்திரேலியா தொடர்ந்து ஆடியது. அலெக்ஸ் கேரி (66 ரன்) சிறிது நேரத்தில் ஜேம்ஸ் ஆண்டர்சனின் பந்து வீச்சில் ஆட்டமிழந்தார். முதல்தர கிரிக்கெட் போட்டிகளில் ஆண்டர்சனின் 1,100-வது விக்கெட்டாக இது பதிவானது. அடுத்து கேப்டன் கம்மின்ஸ் நுழைந்தார். மறுமுனையில் நங்கூரம் பாய்ச்சியது போல் தன்னை திடமாக நிலைநிறுத்தி போராடிய உஸ்மான் கவாஜா 141 ரன்களில் (321 பந்து, 14 பவுண்டரி, 3 சிக்சர்) ஆலி ராபின்சனின் யார்க்கர் பந்தில் போல்டு ஆனார். 1997-ம் ஆண்டுக்கு பிறகு இங்கிலாந்து மண்ணில் அதிக பந்துகளை எதிர்கொண்ட ஆஸ்திரேலிய தொடக்க ஆட்டக்காரர் என்ற திருப்தியோடு வெளியேறினார்.
மழையால் பாதிப்பு
அதன் பிறகு வந்த வீரர்கள் தாக்குப்பிடிக்கவில்லை. கடைசி 14 ரன்னுக்கு 4 விக்கெட்டுகளை தாரைவார்த்த ஆஸ்திரேலியா மதிய உணவு இடைவேளைக்கு முன்பாக முதல் இன்னிங்சில் 116.1 ஓவர்களில் 386 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. கம்மின்ஸ் 38 ரன்கள் எடுத்தார். இங்கிலாந்தை விட 38 ஓவர்கள் ஆஸ்திரேலியா கூடுதலாக விளையாடிய போதிலும் அவர்களின் ஸ்கோரை கூட தாண்ட முடியவில்லை. இங்கிலாந்து தரப்பில் வேகப்பந்து வீச்சாளர்கள் ஸ்டூவர்ட் பிராட், ஆலி ராபின்சன் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
பின்னர் 7 ரன் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணி 10.3 ஓவர்களில் 2 விக்கெட்டுக்கு 28 ரன்கள் எடுத்திருந்த போது மழை குறுக்கிட்டது. பென் டக்கெட் 19 ரன்னிலும், ஜாக் கிராவ்லி 7 ரன்னிலும் கேட்ச் ஆனார்கள். தொடர்ந்து மழை கொட்டியதால் அத்துடன் 3-வது நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது. இன்று 4-வது நாள் ஆட்டம் நடைபெறும்.
மொயீன் அலிக்கு அபராதம்
இதற்கிடையே 2-வது நாள் பீல்டிங்கின் போது எல்லைக்கோடு அருகே நின்ற இங்கிலாந்து சுழற்பந்து வீச்சாளர் மொயீன் அலி நடுவர் அனுமதியின்றி பந்து வீசும் கையில் ஈரத்தை உலர்த்தும் மருந்து பொருளை பயன்படுத்தியது சர்ச்சையை கிளப்பியது. இது குறித்து விசாரித்த நடுவர், ஐ.சி.சி. நடத்தை விதியை மீறிய மொயீன் அலிக்கு போட்டி கட்டணத்தில் இருந்து 25 சதவீதத்தை அபராதமாக விதித்தார். அத்துடன் ஒரு தகுதி இழப்பு புள்ளியும் விதிக்கப்பட்டுள்ளது.