கிரிக்கெட்
இங்கிலாந்து - இலங்கை முதலாவது டெஸ்ட் போட்டி: வெற்றியாளரை கணித்த மைக்கேல் வாகன்
கிரிக்கெட்

இங்கிலாந்து - இலங்கை முதலாவது டெஸ்ட் போட்டி: வெற்றியாளரை கணித்த மைக்கேல் வாகன்

தினத்தந்தி
|
23 Aug 2024 10:04 AM GMT

இங்கிலாந்து - இலங்கை இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி மான்செஸ்டரில் நடைபெற்று வருகிறது.

மான்செஸ்டர்,

இங்கிலாந்து - இலங்கை கிரிக்கெட் அணிகள் இடையிலான 3 போட்டிகள் கொண்ட தொடரில் முதலாவது டெஸ்ட் மான்செஸ்டரில் நேற்று முன்தினம் தொடங்கியது. இதில் முதலில் பேட் செய்த இலங்கை 236 ரன்னில் ஆல்-அவுட் ஆனது. பின்னர் தனது முதல் இன்னிங்சை ஆடிய இங்கிலாந்து முதல் நாள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 22 ரன் எடுத்திருந்தது.

2-வது நாளான நேற்று மழை காரணமாக மதிய உணவு இடைவேளைக்கு பிறகே ஆட்டம் தொடங்கியது. தொடர்ந்து பேட் செய்த இங்கிலாந்து 67 ரன்னுக்குள் 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இதில் கேப்டன் ஆலி போப் 6 ரன்னில் போல்டானதும் அடங்கும். இதன் பிறகு பின்வரிசை ஆட்டக்காரர்கள் அணியை சரிவில் இருந்து காப்பாற்றினர். ஜோ ரூட் (42 ரன்), துணை கேப்டன் ஹாரி புரூக் (56 ரன்), கிறிஸ் வோக்ஸ் (25 ரன்), விக்கெட் கீப்பர் ஜாமி சுமித் ஆகியோரது சிறப்பான ஆட்டத்தால் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் முன்னிலை பெற்றது. 61 ஓவர்களில் அந்த அணி 6 விக்கெட்டுக்கு 259 ரன்கள் எடுத்திருந்த போது மழையால் ஆட்டம் தடைப்பட்டது. அத்துடன் 2-வது நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது. ஜாமி சுமித் (72 ரன்) களத்தில் உள்ளார்.

இலங்கை தரப்பில் வேகப்பந்து வீச்சாளர் அசிதா பெர்னாண்டோ 3 விக்கெட்டும், சுழற்பந்து வீச்சாளர் பிரபாத் ஜெயசூர்யா 2 விக்கெட்டும் கைப்பற்றினர். இன்று 3-வது நாள் ஆட்டம் நடைபெற உள்ளது.

இந்நிலையில் இப்போட்டியில் 2வது இன்னிங்சில் ஓரளவு நன்றாக பேட்டிங் செய்து இலங்கை 200க்கும் மேற்பட்ட ரன்களை இலக்காக நிர்ணயிக்கும் பட்சத்தில் இங்கிலாந்தை வீழ்த்த வாய்ப்புள்ளதாக இங்கிலாந்து முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் தெரிவித்துள்ளார். குறிப்பாக மான்செஸ்டர் பிட்ச் சுழலுக்கு சாதகமாக இருப்பதால் இங்கிலாந்து அணியை இலங்கை வீழ்த்த வாய்ப்புள்ளதாக அவர் கணித்துள்ளார்.

இது குறித்து வாகன் பேசியது பின்வருமாறு:- "இந்த பிட்ச்சை மிகவும் விரும்புகிறேன். அது இலங்கையை ஆர்வத்துடன் வைத்திருக்கும் என்று நினைக்கிறேன். அதில் அவர்களது வெற்றி என்பது எஞ்சியுள்ள 4 விக்கெட்டுகளை வேகமாக எடுத்து 2வது இன்னிங்சில் நன்றாக பேட்டிங் செய்வதை பொறுத்து அமையும். குறிப்பாக மான்செஸ்டரில் பந்து கிரிப்பாகி வருகிறது. எனவே இங்கிலாந்துக்கு எதிராக 200 ரன்களை இலக்காக நிர்ணயித்தால் இலங்கை அணி வெற்றி பெற முடியும்" என்று கூறினார்.

மேலும் செய்திகள்