இங்கிலாந்து சுற்றுப்பயணம்; பயிற்சி கிரிக்கெட்டில் இந்திய அணி தடுமாற்றம்
|லீசெஸ்டர்ஷைர் அணிக்கு எதிரான பயிற்சி கிரிக்கெட்டில் இந்திய வீரர்கள் ரோகித் சர்மா, கோலி ஏமாற்றம் அளித்தனர்.
லீசெஸ்டர்,
ஒரு டெஸ்ட், மூன்று 20 ஓவர் மற்றும் 3 ஒரு நாள் போட்டிகளில் விளையாடுவதற்காக இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்து சென்றுள்ளது. கடந்த ஆண்டு கொரோனா பரவலால் தள்ளிவைக்கப்பட்டு தற்போது நடக்க உள்ள அந்த ஒரே டெஸ்ட் போட்டி பாமிங்காமில் வருகிற 1-ந்தேதி தொடங்குகிறது.
டெஸ்ட் போட்டிக்கு தயாராகும் பொருட்டு இந்திய அணிக்கு 4 நாள் பயிற்சி ஆட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. லீசெஸ்டர்ஷைர் என்ற உள்ளூர் அணிக்கு எதிரான அந்த பயிற்சி ஆட்டம் நேற்று தொடங்கியது. இதற்கு முதல்தர போட்டி அந்தஸ்து கிடையாது என்பதால் எதிரணியில் புஜாரா, ரிஷப் பண்ட், பிரசித் கிருஷ்ணா, பும்ரா ஆகிய இந்திய வீரர்கள் இடம் வகித்தனர்.
இதில் 'டாஸ்' ஜெயித்து முதலில் பேட் செய்த இந்திய வீரர்கள் வேகப்பந்து வீச்சுக்கு வெகுவாக தடுமாறினர். தொடக்க ஆட்டக்காரர்கள் சுப்மான் கில் 21 ரன்னிலும், கேப்டன் ரோகித் சர்மா 25 ரன்னிலும் கேட்ச் ஆகி ஏமாற்றம் அளித்தனர். இதில் வேகப்பந்து வீச்சாளர் ரோமன் வால்கர் வீசிய பந்தை 'புல்ஷாட்'டாக ரோகித் சர்மா தூக்கிய போது கேட்ச் ஆகிப்போனார். அவர் ஆட்டமிழந்ததை ரிஷப் பண்ட், பும்ரா உள்ளிட்ட இந்தியர்களும் கொண்டாடிய வித்தியாசமான காட்சியை பார்க்க முடிந்தது. அதைத் தொடர்ந்து ஹனுமா விஹாரி (3 ரன்), ஸ்ரேயாஸ் அய்யர் (0), ரவீந்திர ஜடேஜா (13 ரன்) ஆகியோர் தாக்குப்பிடிக்கவில்லை.
முன்னாள் கேப்டன் விராட்கோலி ஓரளவு நிலைத்து நின்று ஆடிய போதிலும் பெரியஸ்கோராக மாற்ற தவறினார். அவர் 33 ரன்களில் (69 பந்து, 4 பவுண்டரி, ஒரு சிக்சர்) எல்.பி.டபிள்யூ. ஆனார். அப்போது இந்தியா 6 விக்கெட்டுக்கு 138 ரன்களுடன் தள்ளாடியது. இதன் பின்னர் விக்கெட் கீப்பர் கே.எஸ்.பரத் நேர்த்தியாக பேட்டிங் செய்து அணியை கவுரவமான நிலைக்கு நகர்த்தினார். இந்திய அணி முதல் இன்னிங்சில் 60.2 ஓவர்களில் 8 விக்கெட்டுக்கு 246 ரன்கள் எடுத்திருந்த போது மழை குறுக்கிட்டதால் அத்துடன் முதல் நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது.
பரத் 70 ரன்களுடனும் (111 பந்து, 8 பவுண்டரி, ஒரு சிக்சர்), முகமது ஷமி 18 ரன்னுடனும் களத்தில் உள்ளனர். லீசெஸ்டர்ஷைர் தரப்பில் ரோமன் வால்கர் 5 விக்கெட்டும், வில் டேவிஸ் 2 விக்கெட்டும், பிரசித் கிருஷ்ணா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர். இன்று 2-வது நாள் ஆட்டம் நடைபெறும்.