இந்தியா-பாகிஸ்தான் டெஸ்ட் தொடரை நடத்த விருப்பம் தெரிவித்த இங்கிலாந்து- பதில் அளித்த பிசிசிஐ
|இந்தியா பாகிஸ்தான் கிரிக்கெட் அணிகளுக்கு இடையே கடந்த 2007ஆம் ஆண்டு இருதரப்பு டெஸ்ட் தொடர் நடைபெற்றது.
மும்பை,
இந்தியா பாகிஸ்தான் கிரிக்கெட் அணிகளுக்கு இடையே கடந்த 2007ஆம் ஆண்டு இருதரப்பு டெஸ்ட் தொடர் நடைபெற்றது. இதற்குப் பிறகு இரண்டு அணிகளும் தங்களுக்குள் இருதரப்பு டெஸ்ட் தொடர்களில் விளையாடவில்லை. பல ஆண்டுகளாக நீடித்து வரும் அரசியல் சார்ந்த பிரச்சினைகளால் இரு நாடுகளும் தங்களுக்குள் சுற்றுப்பயணம் செய்து விளையாடவில்லை.
தற்போது இங்கிலாந்து அணி பாகிஸ்தான் நாட்டுக்கு சுற்றுப்பயணம் செய்து 7 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. இந்தத் தொடரின் போது இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் வாரியத்தின் துணைத் தலைவர் மார்ட்டின் டார்லோ பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்துடன், இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளை வைத்து இங்கிலாந்தில் டெஸ்ட் போட்டிகளை நடத்துவது குறித்து பேசியதாக ஆங்கில செய்தி நாளிதழ் செய்தி வெளியிட்டு இருந்தது.
இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் தங்கள் சொந்த வணிக ஆதாயங்களுக்காக இந்த வாய்ப்பை வழங்கினாலும், அடுத்த சில வருடங்களுக்கு இந்தியா- பாகிஸ்தான் இருதரப்பு தொடர் நடத்தப்படுவதற்கான சாத்தியக்கூறுகள் எதுவும் இல்லை என பிசிசிஐ திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
இது குறித்து பிசிசிஐ-யின் மூத்த நிர்வாகி ஒருவர் கூறுகையில் "முதலில், இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் இந்திய-பாகிஸ்தான் தொடர் பற்றி பாகிஸ்தானிடம் பேசியது, சற்று வித்தியாசமானது. எப்படியிருந்தாலும், பாகிஸ்தானுக்கு எதிரான தொடர் என்பது பிசிசிஐ முடிவெடுக்கும் ஒன்று அல்ல. அது அரசாங்கத்தின் முடிவு. இப்போதைய நிலைப்பாடு என்னவெனில் நாங்கள் பாகிஸ்தானுடன் பல அணிகள் பங்கேற்கும் தொடர்களில் மட்டுமே விளையாடுவோம்" என்று தெரிவித்துள்ளார்.