இங்கிலாந்து-அயர்லாந்து இடையிலான ஒரு நாள் கிரிக்கெட் தொடர் - முதலாவது ஆட்டம் இன்று நடக்கிறது
|இங்கிலாந்து-அயர்லாந்து இடையிலான முதலாவது ஒரு நாள் ஆட்டம் லீட்சில் இன்று நடக்கிறது.
லீட்ஸ்,
இங்கிலாந்துக்கு சென்றுள்ள அயர்லாந்து கிரிக்கெட் அணி 3 ஆட்டங்கள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்கிறது. இதன்படி இங்கிலாந்து-அயர்லாந்து இடையிலான முதலாவது ஒரு நாள் ஆட்டம் லீட்சில் இன்று (புதன்கிழமை) நடக்கிறது. உலகக்கோப்பை கிரிக்கெட்டுக்கு முன்பாக இங்கிலாந்து விளையாடும் கடைசி சர்வதேச தொடர் இதுவாகும். ஆனால் உலகக்கோப்பை அணியில் இடம் பெற்ற வீரர்களில் யாரும் அயர்லாந்து தொடருக்கு தேர்வாகவில்லை.
கடைசி நேரத்தில் இங்கிலாந்து பேட்ஸ்மேன் ஜோ ரூட் தன்னை அயர்லாந்துக்கு எதிரான முதலாவது ஒரு நாள் ஆட்டத்தில் விளையாட அனுமதிக்கும்படி கேட்டுக்கொண்டார். இதையடுத்து அணியில் அவர் சேர்க்கப்பட்டார். சமீபத்தில் நியூசிலாந்துக்கு எதிரான ஒரு நாள் தொடரில் (6, 0, 4 மற்றும் 29 ரன்) சொதப்பிய ஜோ ரூட் இழந்த பார்மை மீட்க இந்த ஆட்டத்தை பயன்படுத்திக்கொள்ள விரும்புகிறார். மற்றபடி பெரும்பாலானவர்கள் இளம் வீரர்களே. கேப்டனாக ஜாக் கிராவ்லி செயல்படுகிறார்.
அயர்லாந்து அணி பால் ஸ்டிர்லிங் தலைமையில் களம் இறங்குகிறது. ஆன்டி பால்பிர்னி, கர்டிஸ் கேம்ப்பெர், டெக்டர், லோர்கன் டக்கர், டாக்ரெல், மார்க் அடைர் என்று திறமையான வீரர்கள் அணிவகுத்து நிற்பதால் இங்கிலாந்துக்கு கடும் சவால் காத்திருக்கிறது என்பதில் சந்தேகமில்லை. இந்த ஆட்டம் இந்திய நேரப்படி மாலை 5 மணிக்கு தொடங்குகிறது.