கடைசி டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி தொடரை முழுமையாக கைப்பற்றி அசத்தியது இங்கிலாந்து...!
|பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இங்கிலாந்து அணி அந்த அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாடியது.
கராச்சி,
பாகிஸ்தான் - இங்கிலாந்து அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கராச்சியில் நடைபெற்று வருகிறது. இதில் 'டாஸ்' வென்று முதலில் பேட் செய்த பாகிஸ்தான் 304 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. பின்னர் தனது முதல் இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணி தொடக்கத்தில் விக்கெட்டுகளை இழந்து தடுமாறினாலும் அந்த அணியின் அதிரடி ஆட்டக்காரர் ஹாரி புரூக் சதம் அடித்து அசத்தி அணியை சரிவில் இருந்து மீட்டார்.
இதையடுத்து இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்சில் 81.4 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 354 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. இதையடுத்து 50 ரன்கள் பின்னிலையுடன் தனது 2வது இன்னிங்சை ஆடிய பாகிஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களை ஜேக் லீச் வீழ்த்தினார். இதில் ஷாபிக் 26 ரன்னிலும், ஷான் மசூத் 24 ரன்னிலும், அடுத்து வந்த அசார் அலி ரன் எடுக்காமலும் அவுட் ஆகினர்.
இதையடுத்து களம் புகுந்த கேப்டன் பாபர் ஆசமும், ஷாகிலும் அணியை சரிவில் இருந்து மீட்டனர். இருவரும் அரைசதம் அடித்தனர். அரைசதம் அடித்த நிலையில் பாபர் ஆசம் 54 ரன்னிலும், ஷாகில் 53 ரன்னிலும், அடுத்து வந்த ரிஸ்வான் 7 ரன்னிலும் அவுட் ஆகினர். இறுதியில் பாகிஸ்தான் அணி 74.5 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 216 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது.
இங்கிலாந்து அணி தரப்பில் ரெஹான் அகமது 5 விக்கெட்டும், ஜேக் லீச் 3 விக்கெட்டும் வீழ்த்தினர். இதையடுத்து இங்கிலாந்து அணிக்கு 167 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. தொடர்ந்து பேட்டிங் ஆடிய இங்கிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக பென் டக்கட் மற்றும் ஜாக் க்ராவ்லி ஆகியோர் களம் புகுந்தனர். எளிய இலக்கு என்பதால் 3ம் நாளான நேற்றே ஆட்டத்தை முடிக்க நினைத்தனர். இருவரும் மட்டையை அதிரடியாக சுழட்டினர்.
அதிரடியாக ஆடிய இவர்கள் 11 ஓவர்கள் முடிவில் 87 ரன்கள் குவித்து அசத்தினர். டெஸ்ட் கிரிக்கெட் போல் இல்லாமல் டி20 போட்டி ஆடினர். இதனால் இங்கிலாந்து அணியின் ஸ்கோர் மளமளவென எகிறியது. அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய க்ராவ்லி 41 ரன்கள் அடித்திருந்த நிலையில் ஆட்டம் இழந்தார். இதையடுத்து களம் இறங்கிய ரெஹான் அகமது 10 ரன்னில் அவுட் ஆனார்.
இதையடுத்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் களம் இறங்கினார். பென் ஸ்டோக்ஸ் மற்றும் பென் டக்கட் இணை மேற்கொண்டு விக்கெட் விழாமல் பார்த்துக் கொண்டனர். 3ம் நாளான நேற்றைய ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து அணி 17 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 112 ரன்கள் குவித்திருந்தது.
இந்நிலையில் 4ம் நாள் ஆட்டம் இன்று தொடங்கியது. ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்திலேயே வெற்றிக்குக் தேவைப்பட்ட 55 ரன்களை அடித்து அசத்தியது. இதன் மூலம் பாகிஸ்தானுக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியை இங்கிலாந்து அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் கைப்பற்றியது.
இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இங்கிலாந்து அணி 3-0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றி அசத்தியது. இந்தத்தொடர் பாகிஸ்தான் மண்ணில் நடந்தது குறிப்பிடத்தக்கது. இந்தப்போட்டிக்கன் ஆட்டநாயகன் விருதும், இந்த தொடருக்கான தொடர் நாயகன் விருதும் இங்கிலாந்து வீரர் ஹாரி புரூக்குக்கு வழங்கப்பட்டது.