இங்கிலாந்து-ஆஸ்திரேலியா ஆஷஸ் தொடர் - கடைசி டெஸ்ட் இன்று தொடக்கம்
|ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை சமன் செய்யும் முனைப்புடன் இங்கிலாந்து கடைசி டெஸ்டில் இன்று களம் இறங்குகிறது.
லண்டன்,
இங்கிலாந்துக்கு சென்றுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் முதல் இரு டெஸ்டில் ஆஸ்திரேலியாவும், 3-வது டெஸ்டில் இங்கிலாந்தும் வெற்றி பெற்றன. மான்செஸ்டரில் நடந்த 4-வது டெஸ்ட் டிராவில் முடிந்தது. இதனால் தொடரில் ஆஸ்திரேலியா 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இந்த நிலையில் இவ்விரு அணிகள் இடையிலான 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி லண்டன் ஓவலில் இன்று தொடங்குகிறது.
பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து அணி மான்செஸ்டர் டெஸ்டில் முதல் இன்னிங்சில் 592 ரன்கள் குவித்து வெற்றியின் விளிம்புக்கு வந்தது. ஆனால் கடைசி நாளில் மழை பெய்து ஆஸ்திரேலியாவை காப்பாற்றி விட்டது. அத்துடன் ஆஷஸ் கோப்பையையும் ஆஸ்திரேலியா தக்க வைத்துக் கொண்டது.
இனி கோப்பையை வெல்ல வாய்ப்பில்லை என்ற நிலையில் 2001-ம் ஆண்டுக்கு பிறகு சொந்த மண்ணில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை இழந்ததில்லை என்ற பெருமையை நீட்டிக்கும் உத்வேகத்துடன் இங்கிலாந்து ஆயத்தமாகி வருகிறது. மூத்த வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் இந்த தொடரில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை என்றாலும் அவருக்கு இன்னொரு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலிய அணி கோப்பையை தனதாக்கினாலும் தொடரை 3-1 என்ற கணக்கில் வெல்வதில் தீவிரம் காட்டுகிறது. அந்த அணியில் ஒரே ஒரு மாற்றமாக கேமரூன் கிரீனுக்கு பதிலாக சுழற்பந்து வீச்சாளர் டாட் மர்பி இடம் பெறலாம். மற்றபடி மாற்றம் இருக்காது. இரு அணியினரும் நீயா-நானா என்று யுத்தம் போல் ஆக்ரோஷத்துடன் வரிந்து கட்டுவதால் இந்த போட்டியிலும் பரபரப்புக்கு பஞ்சமிருக்காது.
முந்தைய போட்டி போன்று இந்த டெஸ்டுக்கு மழை பெரிய அளவில் அச்சுறுத்தலாக இருக்காது. ஆனால் முதல் நாளிலும், 2-வது மற்றும் கடைசி நாளிலும் கொஞ்சம் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
போட்டிக்கான இரு அணி வீரர்கள் விவரம் வருமாறு:-
இங்கிலாந்து: ஜாக் கிராவ்லி, பென் டக்கெட், மொயீன் அலி, ஜோ ரூட், ஹாரி புரூக், பென் ஸ்டோக்ஸ் (கேப்டன்), ஜானி பேர்ஸ்டோ, கிறிஸ் வோக்ஸ், மார்க் வுட், ஸ்டூவர்ட் பிராட், ஜேம்ஸ் ஆண்டர்சன்.
ஆஸ்திரேலியா: கவாஜா, டேவிட் வார்னர், லபுஸ்சேன், ஸ்டீவன் சுமித், டிராவிஸ் ஹெட், மிட்செல் மார்ஷ், அலெக்ஸ் கேரி, கம்மின்ஸ் (கேப்டன்), மிட்செல் ஸ்டார்க், ஹேசில்வுட், டாட் மர்பி அல்லது கேமரூன் கிரீன்.