வெற்றியை விட பொழுதுபோக்குக்கு முன்னுரிமை அளிப்பதா? - இங்கிலாந்து அணிக்கு பாய்காட் கண்டனம்
|இங்கிலாந்து அணி ரசிகர்களுக்கு விருந்து அளிப்பதை விட வெற்றிக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் விளையாட வேண்டும் என்று ஜெப்ரி பாய்காட் கூறியுள்ளார்.
லண்டன்,
ஆஷஸ் கிரிக்கெட்டில் இங்கிலாந்து அணியின் அணுகுமுறையை விமர்சித்து இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் பேட்ஸ்மேனும், வர்ணனையாளருமான ஜெப்ரி பாய்காட் பத்திரிகை ஒன்றில் எழுதிய கட்டுரையில் கூறியிருப்பதாவது:-
இங்கிலாந்து கிரிக்கெட் அணி ஆக்ரோஷம் என்ற பெயரில் வெற்றியை விட பொழுதுபோக்குக்கு முக்கியத்துவம் அளிப்பது போல் தோன்றுகிறது. ஆனால் மற்ற எல்லாவற்றையும் விட இங்கிலாந்து ஆஷஸ் கோப்பையை வெல்ல வேண்டும் என்பது தான் இங்கிலாந்து ரசிகர்களின் விருப்பம் என்பதை மறந்து விடக்கூடாது. வேகமாக ரன் குவிப்பது, சிக்சர், பவுண்டரி விரட்டுவது எல்லாமே ரசிகர்களை கவர்ந்திழுக்கக்கூடியது. சிறப்பான விஷயம் தான். ஆனால் இறுதியில் ஆஸ்திரேலியா கோப்பையுடன் தாயகம் திரும்பினால், வருத்தப்படுவது நாம் தான். அதன் பிறகு எப்படி விளையாடினோம் என்பது பிரஜோனம் இல்லாமல் போய் விடும்.
இங்கிலாந்து அணி வெற்றிக்காக விளையாடாவிட்டால் ஆஷஸ் கிரிக்கெட் முக்கியத்துவத்தை இழந்து காட்சி போட்டியாக மாறிவிடும். எனவே ரசிகர்களுக்கு விருந்து அளிப்பதை விட வெற்றிக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் விளையாட வேண்டும். கிரிக்கெட் செஸ் விளையாட்டு போன்றது. தேவைப்படும் போது தடுப்பாட்ட யுக்தியை கடைபிடிக்க வேண்டியது அவசியமாகும். சில சமயம் பொறுமையாக செயல்பட்டு தான் ஆக வேண்டும். எல்லா நேரமும் தாக்குதல் பாணியை கடைபிடித்துக் கொண்டிருக்க முடியாது. இந்த அடிப்படை உண்மையை இங்கிலாந்து அணியினர் புரிந்து கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.