வாழ்வா-சாவா கட்டத்தில் இங்கிலாந்து..!! இலங்கையுடன் இன்று மோதல்
|உலகக் கோப்பை கிரிக்கெட்டில் கட்டாயம் வென்றாக வேண்டிய நெருக்கடியுடன் நடப்பு சாம்பியன் இங்கிலாந்து அணி இன்று இலங்கையுடன் மல்லுக்கட்டுகிறது.
பெங்களூரு,
13-வது உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 10 அணிகளும் தங்களுக்குள் தலா ஒரு முறை மோதுகின்றன. லீக் முடிவில் புள்ளி பட்டியலில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு தகுதிபெறும்.
இந்த கிரிக்கெட் திருவிழாவில், பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் இன்று (வியாழக்கிழமை) நடக்கும் 25-வது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்து அணி, முன்னாள் சாம்பியன் இலங்கையுடன் மோதுகிறது.
தலா ஒரு வெற்றி, 3 தோல்வி என்று 2 புள்ளியுடன் உள்ள இவ்விரு அணிகள் எஞ்சிய ஆட்டங்கள் அனைத்திலும் வென்றால் மட்டுமே அரைஇறுதி குறித்து நினைத்து பார்க்க முடியும். ஒன்றில் தோற்றாலும் வெளியேற வேண்டியது தான். அதனால் இவ்விரு அணிகளுக்கும் இது வாழ்வா-சாவா? என்றே இருக்கப்போகிறது.
ஜோஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்து அணி நடப்பு தொடரில், வங்காளதேசத்துக்கு எதிராக மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. நியூசிலாந்து, ஆப்கானிஸ்தான், தென்ஆப்பிரிக்காவிடம் உதை வாங்கியது. இதில் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான தோல்வி தான் இங்கிலாந்தை நெருக்கடி வளையத்தில் சிக்க வைத்துள்ளது. முந்தைய தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஆட்டத்தில் 399 ரன்களை வாரி வழங்கிய இங்கிலாந்து 2-வது பேட்டிங்கில் 170 ரன்னில் சுருண்டு மோசமான தோல்வியை தழுவியது. சீரற்ற பந்துவீச்சும், டேவிட்மலான் (192 ரன்), ஜோ ரூட் (172 ரன்) தவிர்த்து மற்ற பேட்ஸ்மேன்களின் தடுமாற்றமும் இங்கிலாந்தை பலவீனப்படுத்தி விட்டது. அதிரடி சூரர் என்று வர்ணிக்கப்படும் ஜோஸ் பட்லர் 4 ஆட்டத்தில் வெறும் 87 மட்டுமே எடுத்துள்ளார்.
மொயீன் அலி பேட்டி
சிறிய மைதானம், பேட்டிங்குக்கு உகந்த ஆடுகளத்தில் இங்கிலாந்து மீண்டும் ரன்வேட்டையோடு சரிவில் இருந்து மீள்வதற்கு இந்த ஆட்டம் அருமையான சந்தர்ப்பமாகும். இங்கிலாந்து ஆல்-ரவுண்டர் மொயீன் அலி நேற்று நிருபர்களிடம் பேசுகையில், '2015-ம் ஆண்டில் இருந்து நாங்கள் முழுமையாக ஆக்ரோஷமான கிரிக்கெட்டை வெளிப்படுத்துகிறோம். அதில் சாதித்தும் காட்டியிருக்கிறோம். ஆனால் இந்த தொடரில் ஆக்ரோஷமாக ஆடுவதில் உள்ள குறைபாடே தற்போதைய பின்னடைவுக்கு காரணம் என்று நினைக்கிறேன். எனவே ஆக்ரோஷமாக ஆட வேண்டியது அவசியமாகும்' என்று குறிப்பிட்டார். பந்துவீச்சில் ரீஸ் டாப்லே (8 விக்கெட்) விரலில் ஏற்பட்ட எலும்பு முறிவால் எஞ்சிய போட்டிகளில் இருந்து விலகி விட்டார். அவருக்கு பதிலாக இன்றைய ஆட்டத்தில் ஆல்-ரவுண்டர் மொயீன் அலி களம் காணுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதே நிலைமையில் தான் இலங்கையும் தவிக்கிறது. தென்ஆப்பிரிக்கா, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா ஆகிய அணிகளிடம் வரிசையாக தோல்வி அடைந்த இலங்கை அணி கடந்த ஆட்டத்தில் நெதர்லாந்தை வீழ்த்தி ஒரு வழியாக முதலாவது வெற்றியை பதிவு செய்தது. தோள்பட்டை காயத்தால் விலகிய வேகப்பந்து வீச்சாளர் பதிரானாவுக்கு பதிலாக ஆல்-ரவுண்டர் மேத்யூஸ் சேர்க்கப்பட்டு உள்ளார். ஆனால் இன்றைய ஆட்டத்தில் ஆடும் லெவனில் அவருக்கு இடம் கிடைப்பது சந்தேகம் தான்.
பொறுப்பு கேப்டன் குசல் மென்டிஸ் (ஒரு சதத்துடன் 218 ரன்), சமரவிக்ரமா (ஒரு சதம் உள்பட 230 ரன்), வேகப்பந்து வீச்சாளர் மதுஷன்கா (11 விக்கெட்) ஆகியோர் நல்ல பார்மில் உள்ளனர். இவர்களை தான் அந்த அணி மலைபோல் நம்பி இருக்கிறது. அசலங்கா, தனஞ்ஜெயா டி சில்வா ஆகியோரும் பேட்டிங்கில் கைகொடுத்தால் நிச்சயம் மிரட்டலாம்.
உலகக் கோப்பையில் இதுவரை...
உலகக்கோப்பையில் இவ்விரு அணிகளும் இதுவரை 11 ஆட்டங்களில் மோதியுள்ளன. இதில் 6-ல் இங்கிலாந்தும், 5-ல் இலங்கையும் வெற்றி பெற்றுள்ளன. ஆனாலும் 1999-ம் ஆண்டுக்கு பிறகு உலகக் கோப்பையில் இங்கிலாந்திடம் இலங்கை தோற்றதில்லை. அதன் பிறகு சந்தித்த 4 முறையும் இலங்கைக்கே வெற்றி கிட்டியுள்ளது. அந்த பெருமையை தக்கவைக்கும் உத்வேகத்துடன் இலங்கை வியூகங்களை தீட்டுகிறது.
போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-
இங்கிலாந்து: ஜானி பேர்ஸ்டோ, டேவிட் மலான், ஜோ ரூட், பென் ஸ்டோக்ஸ், ஜோஸ் பட்லர் (கேப்டன்), ஹாரி புரூக், மொயீன் அலி, கிறிஸ் வோக்ஸ், டேவிட் வில்லி, அடில் ரஷித், அட்கின்சன் அல்லது மார்க்வுட்.
இலங்கை: பதும் நிசாங்கா, குசல் பெரேரா, குசல் மென்டிஸ் (கேப்டன்), சமரவிக்ரமா, சாரித் அசலங்கா, தனஞ்ஜெயா டி சில்வா, துஷன் ஹேமந்தா அல்லது வெல்லாலகே, சமிகா கருணாரத்னே, தீக்ஷனா, கசுன் ரஜிதா, மதுஷன்கா.
பிற்பகல் 2 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ்1 சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.