எலிமினேட்டர் சுற்று: லக்னோ அணிக்கு 183 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது மும்பை
|மும்பை அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 182 ரன்கள் குவித்தது.
சென்னை,
ஐ.பி.எல். தொடரில் நேற்று நடைபெற்ற முதலாவது குவாலிபையர் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி குஜராத் டைட்டன்ஸ் அணியை வீழ்த்தி 10வது முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. தோல்வி அடைந்த குஜராத் டைட்டன்ஸ் குவாலிபையர் 2-ல் ஆட உள்ளது.
இந்நிலையில் இன்று சென்னையில் நடைபெறும் எலிமினேட்டர் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் - லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மோத உள்ளன. இந்த ஆட்டத்தில் வெற்றி பெறும் அணி குஜராத்துக்கு எதிரான குவாலிபையர் 2-ல் விளையாடும். அதே வேளையில் தோல்வி அடையும் அணி தொடரில் இருந்து வெளியேறும்.
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் இந்த ஆட்டத்தில் ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியுடன், குருணால் பாண்ட்யா தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி மோதுகிறது. இதில் டாஸ் வென்ற மும்பை அணியின் கேப்டன் ரோகித் சர்மா பேட்டிங்கை தேர்வு செய்தார். இதன்படி மும்பை அணி தற்போது முதலாவதாக பேட்டிங் செய்தது.
அந்த அணியின் தொடக்க வீரர்களாக களமிறங்கிய இஷான் கிஷன் 15 ரன்களிலும், ரோகித் சர்மா 11 ரன்களிலும் அவுட் ஆகி வெளியேறினர். அடுத்து வந்த கேமரூர் கிரீன் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி (6 பவுண்டரிகள், 1 சிக்ஸர்) 23 பந்துகளில் 41 ரன்கள் சேர்த்தார். அரை சதத்தை நோக்கி முன்னேறிய அவர் நவீன் உல்-ஹக் வீசிய பந்தில் போல்ட் ஆனார்.
நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்திய சூர்யகுமார் யாதவ் 33 ரன்களில் கேட்ச் ஆகி ஆட்டமிழந்தார். திலக் வர்மா 26 ரன்களிலும், டிம் டேவிட் 13 ரன்களிலும் கேட்ச் ஆகி விக்கெட்டை இழந்தனர். அடுத்தடுத்து விக்கெட்டுகள் சரிந்த நிலையில், மும்பை அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 182 ரன்கள் குவித்தது. இதையடுத்து 183 ரன்கள் என்ற இலக்கை நோக்கி லக்னோ அணி விளையாடுகிறது.