துலீப் கோப்பை: திலக், பிரதாம் சிங் சதம்... ஸ்ரேயாஸ் அணிக்கு இமாலய இலக்கு நிர்ணயித்த இந்தியா ஏ
|இந்தியா ஏ தரப்பில் திலக் வர்மா மற்றும் பிரதாம் சிங் சதம் அடித்து அசத்தினர்.
அனந்தபூர்,
துலீப் கோப்பை தொடரின் 2வது சுற்றில் இந்தியா ஏ - இந்தியா டி அணிகள் விளையாடி வருகின்றன. அப்போட்டியில் டாஸ் வென்ற இந்தியா டி முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.
அதன்படி முதல் இன்னிங்சை தொடங்கிய இந்தியா ஏ அணி போராடி 290 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக ஷாம்ஸ் முலானி 89 ரன்கள் குவித்தார். இந்தியா டி அணி சார்பில் அதிகபட்சமாக ஹர்ஷித் ராணா 4 விக்கெட்டுகளை சாய்த்தார்.
அதைத் தொடர்ந்து களமிறங்கிய இந்தியா டி அணி முதல் இன்னிங்சில் வெறும் 183 ரன்களுக்கு சுருண்டது. கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் 0, சஞ்சு சாம்சன் 5 ரன் என முக்கிய பேட்ஸ்மேன்கள் பெரிய ரன்களை எடுக்க தவறிய அந்த அணிக்கு அதிகபட்சமாக படிக்கல் 92, ஹர்ஷித் ராணா 31 ரன்கள் எடுத்தனர். இந்தியா ஏ சார்பில் அதிகபட்சமாக கலில் அகமது மற்றும் ஆகீப் கான் தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.
அதைத்தொடர்ந்து 107 ரன்கள் முன்னிலையுடன் களமிறங்கிய இந்தியா ஏ அணிக்கு சிறப்பாக விளையாடிய கேப்டன் மயங்க் அகர்வால் 115 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்து 56 ரன்கள் குவித்து அவுட்டானார். அவருடன் சேர்ந்து விளையாடிய மற்றொரு தொடக்க வீரர் பிரதாம் சிங்குடன், திலக் வர்மா ஜோடி சேர்ந்தார்.
சிறப்பாக விளையாடிய இருவரும் சதமடித்து அசத்தினர். பிரதாம் சிங் 122 ரன்கள் விளாசி அவுட்டானார். இந்தியா ஏ அணி 380 ரன்களில் டிக்ளேர் செய்வதாக அறிவித்தது. திலக் வர்மா 111 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். இதன் மூலம் இந்தியா டி வெற்றி பெற 488 ரன்களை இலக்காக நிர்ணயம் செய்துள்ளது இந்தியா ஏ.
இதனையடுத்து 488 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இமாலய இலக்கை நோக்கி களமிறங்கிய இந்தியா டி அணி 3-வது நாளில் 1 விக்கெட்டை இழந்து 62 ரன்கள் அடித்துள்ளது. யாஷ் துபே 15 ரன்களுடனும், ரிக்கி புய் 44 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.