துலீப் டிராபி தொடர்; முதல் ஆட்டத்தை தவறவிடும் இஷான் கிஷன்...?
|இஷான் கிஷனுக்கு பதிலாக இந்தியா ‘டி’ அணியில் சஞ்சு சாம்சன் சேர்க்கப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது.
புதுடெல்லி,
துலீப் டிராபி 2024 கிரிக்கெட் தொடர், நாளை தொடங்குகிறது. இந்த தொடரில் முன்புபோல் இல்லாமல், இந்திய அணியின் நட்சத்திர வீரர்களும் பங்கேற்க உள்ளனர். இதன் காரணமாக இத்தொடர் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா, விராட் கோலி, ஜஸ்ப்ரீத் பும்ரா, ரவிச்சந்திரன் அஸ்வின், ரவீந்திர ஜடேஜா ஆகியோரை தவிர, மற்ற அனைத்து முன்னணி இந்திய வீரர்களும் இத்தொடரில் விளையாட உள்ளனர்.
இந்தியா - வங்காளதேசம் இடையிலான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் வரும் 19ம் தேதி தொடங்க உள்ளது. துலீப் டிராபி 2024 தொடரில் அபாரமாக செயல்படும் இளம் வீரர்களுக்கு, வங்காளதேச தொடரில் இடம் வழங்க, வாய்ப்பு உள்ளதால், இளம் வீரர்கள் முழு ஆற்றலுடன் விளையாட வாய்ப்புள்ளது.
இந்நிலையில் துலீப் டிராபி தொடருக்கான இந்தியா 'டி' அணியில் இடம் பெற்றிருந்த அதிரடி விக்கெட் கீப்பர், பேட்ஸ்மேன் இஷான் கிஷன் நாளை தொடங்க உள்ள தொடக்க ஆட்டத்தில் (இந்தியா 'சி' அணிக்கு எதிராக) விளையாடுவதில் சந்தேகம் நிலவுகிறது.
இஷான் கிஷனுக்கு காயம் ஏற்பட்டுள்ளதாகவும், அதன் காரணமாக நாளை தொடங்க உள்ள முதல் ஆட்டத்தில் அவர் விளையாடமாட்டார் எனவும் தகவல் வெளியாகி உள்ளது. அவருக்கு பதிலாக இந்தியா 'டி' அணியில் சஞ்சு சாம்சன் சேர்க்கப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது.