துலீப் கோப்பை: அறிமுக போட்டியிலேயே சச்சினின் மாபெரும் சாதனையை தகர்த்த முஷீர் கான்
|துலீப் கோப்பை கிரிக்கெட் போட்டி நேற்று தொடங்கியது.
பெங்களூரு,
இந்தியாவில் நடைபெறும் உள்ளூர் டெஸ்ட் தொடரான துலீப் கோப்பை கிரிக்கெட் போட்டி (4 நாள் ஆட்டம்) நேற்று தொடங்கியது. இதில் இந்தியா ஏ - இந்தியா பி அணிகள் இடையிலான ஆட்டம் பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற இந்தியா ஏ அணியின் கேப்டன் சுப்மன் கில் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார்.
இதையடுத்து முதலில் பேட் செய்த இந்தியா பி அணி தடுமாற்றத்துடன் தொடங்கியது. கேப்டன் அபிமன்யு ஈஸ்வரன் 13 ரன்னிலும், ஜெய்ஸ்வால் 30 ரன்னிலும் கேட்ச் ஆனார்கள். இதன் பின்னர் முஷீர் கான் நிலைத்து நின்று ஆட இன்னொரு பக்கம் விக்கெட்டுகள் சரிந்தன. முஷீரின் சகோதரரான சர்ப்ராஸ் கான் (9 ரன்), விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் (7 ரன்), நிதிஷ்குமார் ரெட்டி (0), வாஷிங்டன் சுந்தர் (0), சாய் கிஷோர் (1 ரன்) நிலைக்கவில்லை. ஒரு கட்டத்தில் அந்த அணி 7 விக்கெட்டுக்கு 94 ரன்களுடன் தள்ளாடியது.
இதைத் தொடர்ந்து முஷீர்கானும், நவ்தீப் சைனியும் இணைந்து அணியை சரிவில் இருந்து மீட்டனர். அபாரமாக ஆடிய மும்பையைச் சேர்ந்த 19 வயதான முஷீர் கான் சதம் அடித்து அசத்தினார். தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய அவர் 181 ரன்கள் குவித்த நிலையில் ஆட்டமிழந்தார். அவருக்கு பக்க பலமாக நின்ற நவ்தீப் சைனி அரைசதம் அடித்தார்.
இதன் மூலம் இந்தியா பி அணி முதல் இன்னிங்சில் 321 ரன்கள் குவித்த நிலையில் ஆல் அவுட் ஆனது. இந்தியா ஏ தரப்பில் அதிகபட்சமாக ஆகாஷ் தீப் 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார். இதனையடுத்து முதல் இன்னிங்சை தொடங்கிய இந்தியா ஏ அணி 2-வது நாள் முடிவில் 2 விக்கெட்டுகளை இழந்து 134 ரன்கள் அடித்துள்ளது.
முன்னதாக முஷீர் கான் துலீப் கோப்பையில் இப்போதுதான் முதல் முறையாக விளையாடுகிறார். அறிமுக போட்டியிலேயே அவர் 181 ரன்கள் குவித்தார். அதன் வாயிலாக துலீப் கோப்பை வரலாற்றில் 20 வயதுக்கு முன் அறிமுகப் போட்டியிலேயே அதிக ரன்கள் குவித்த மூன்றாவது வீரர் என்ற சச்சின் டெண்டுல்கரின் (159 ரன்கள்) மாபெரும் சாதனையை முஷீர் கான் உடைத்தார்.
இந்த பட்டியலில் தமிழக வீரர் பாபா இந்திரஜித் (212 ரன்கள்), யாஷ் துள் (193 ரன்கள்) முதல் 2 இடங்களில் உள்ளனர்.