துலீப் கோப்பை கிரிக்கெட் - அரைஇறுதியில் தென்மண்டலம் 645 ரன் வித்தியாசத்தில் வெற்றி
|தென் மண்டலம் 645 ரன்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றியை ருசித்து இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது.
சேலம்,
துலீப் கோப்பை கிரிக்கெட்டில் தென் மண்டலம்- வடக்கு மண்டலம் அணிகள் இடையிலான அரைஇறுதி ஆட்டம் சேலத்தில் கடந்த 15-ந்தேதி தொடங்கியது. இதில் முதலில் பேட்டிங் செய்த தென் மண்டலம் 8 விக்கெட்டுக்கு 630 ரன்கள் குவித்து 'டிக்ளேர்' செய்தது.
வடக்கு மண்டலம் தனது முதல் இன்னிங்சில் 207 ரன்னில் ஆட்டமிழந்தது. அடுத்து 423 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை ஆடிய தென் மண்டலம் 4 விக்கெட்டுக்கு 316 ரன்களுடன் டிக்ளேர் செய்து, 740 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது.
இதை நோக்கி 4-வது மற்றும் கடைசி நாளான நேற்று 2-வது இன்னிங்சை ஆடிய வடக்கு மண்டலம் 30.4 ஓவர்களில் வெறும் 94 ரன்னில் சுருண்டது. சுழற்பந்து வீச்சாளர்கள் கிருஷ்ணப்பா கவுதம், சாய் கிஷோர், தனாய் தியாகராஜன் தலா 3 விக்கெட்டுகளை சாய்த்தனர்.
இதன் மூலம் தென் மண்டலம் 645 ரன்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றியை ருசித்து இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது. இரு இன்னிங்சையும் சேர்த்து மொத்தம் 10 விக்கெட்டுகளை அள்ளிய இடக்கை சுழற்பந்து வீச்சாளர் தமிழகத்தை சேர்ந்த சாய் கிஷோர் ஆட்டநாயகன் விருது பெற்றார்.
கோவையில் நடந்த மேற்கு மண்டலத்திற்கு எதிரான அரைஇறுதியில் 501 ரன்கள் இலக்கை நோக்கி 2-வது இன்னிங்சை ஆடிய மத்திய மண்டல அணி 57.1 ஓவர்களில் 221 ரன்னில் ஆல்-அவுட் ஆனது. மேற்கு மண்டலம் 279 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிப்போட்டியை எட்டியது. மேற்கு மண்டலம்-தென்மண்டலம் இடையிலான இறுதி ஆட்டம் வருகிற 21-ந்தேதி கோவையில் தொடங்குகிறது.