< Back
கிரிக்கெட்
துலீப் கோப்பை: தெற்கு மண்டலத்தை வீழ்த்தி மேற்கு மண்டல அணி சாம்பியன்
கிரிக்கெட்

துலீப் கோப்பை: தெற்கு மண்டலத்தை வீழ்த்தி மேற்கு மண்டல அணி சாம்பியன்

தினத்தந்தி
|
25 Sept 2022 2:01 PM IST

துலீப் கோப்பை இறுதி போட்டியில் தெற்கு மண்டல அணியை 294 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி மேற்கு மண்டல அணி சாம்பியன் பட்டம் வென்றது.

கோவை,

துலீப் கோப்பை இறுதி ஆட்டம் கோவையில் நடைபெற்று வருகிறது. இந்தப்போட்டியில் மேற்கு மண்டலம், தெற்கு மண்டல அணிகள் விளையாடுகின்றன. இந்த போட்டியில் முதல் இன்னிங்சில் மேற்கு மண்டல அணி 96.3 ஓவர்களில் 10 விக்கெட் இழப்புக்கு 270 ரன்கள் எடுத்திருந்தது. அடுத்து தனது முதல் இன்னிங்சை தொடங்கிய தெற்கு மண்டல அணி 83.1 ஓவர்களில் 10 விக்கெட் இழப்புக்கு 327 ரன்கள் குவித்து முன்னிலை பெற்றது.

தெற்கு மண்டல அணி தரப்பில் இந்திரஜித் 118 ரன்கள் குவித்தார். அடுத்து தனது 2வது இன்னிங்சை தொடங்கிய மேற்கு மண்டல அணி 128 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 585 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. அந்த அணி தரப்பில் ஜெய்ஸ்வால் 265 ரன்கள் குவித்தார்.

சர்ப்ராஸ் கான் 127 ரன்கள் எடுத்தார். அடுத்து 529 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தனது 2வது இன்னிங்சை தொடங்கிய தெற்கு மண்டல அணி 4-ம் நாள் ஆட்ட நேர முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 154 ரன்கள் எடுத்திருந்தது.

இந்நிலையில் இன்று 5வது நாள் ஆட்டம் நடைபெற்றது. இதில் பொறுமையாக ஆடிக் கொண்டிருந்த ரவி தேஜா அரைசதம் அடித்தார். அவர் 53 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஆட்டம் இழந்தார். அவர் ஆட்டம் இழந்த உடன் மற்ற வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர்.

இறுதியில் தெற்கு மண்டல அணி 71.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 234 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. இதன் மூலம் மேற்கு மண்டல அணி 294 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இந்த வெற்றியின் மூலம் துலீப் கோப்பையை மேற்கு மண்டல அணி கைப்பற்றியது. இந்த போட்டியின் ஆட்ட நாயகனாக இரட்டை சதம் அடித்த ஜெய்ஸ்வால் தேர்வு செய்யப்பட்டார். தொடர் நாயகனாக ஜெய்தேவ் உனத்கட் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

மேலும் செய்திகள்