துலீப் கோப்பை இறுதி போட்டி: ஜெய்ஸ்வால் இரட்டை சதம் அடித்து அசத்தல் - தெற்கு மண்டல அணி தடுமாற்றம்
|தெற்கு மண்டல அணி துலீப் கோப்பையை வெல்ல இன்னும் 375 ரன்கள் தேவை, நாளை கடைசி நாள் ஆட்டம் நடைபெறுகிறது.
கோவை,
துலீப் கோப்பை இறுதி ஆட்டம் கோவையில் நடைபெற்று வருகிறது. இந்தப்போட்டியில் மேற்கு மண்டலம், தெற்கு மண்டல அணிகள் விளையாடுகின்றன. இந்த போட்டியில் முதல் இன்னிங்சில் மேற்கு மண்டல அணி 96.3 ஓவர்களில் 10 விக்கெட் இழப்புக்கு 270 ரன்கள் எடுத்திருந்தது. அடுத்து தனது முதல் இன்னிங்சை தொடங்கிய தெற்கு மண்டல அணி 83.1 ஓவர்களில் 10 விக்கெட் இழப்புக்கு 327 ரன்கள் குவித்து முன்னிலை பெற்றது. தெற்கு மண்டல அணி தரப்பில் இந்திரஜித் 118 ரன்கள் குவித்தார்.
அடுத்து தனது 2வது இன்னிங்சை தொடங்கிய மேற்கு மண்டல அணி 128 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 585 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. அந்த அணி தரப்பில் ஜெய்ஸ்வால் 265 ரன்கள் குவித்தார். சர்ப்ராஸ் கான் 127 ரன்கள் எடுத்தார். அடுத்து 529 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தனது 2வது இன்னிங்சை தொடங்கிய தெற்கு மண்டல அணி 4-ம் நாள் ஆட்ட நேர முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 154 ரன்கள் எடுத்துள்ளது.
தெற்கு மண்டல அணியின் வெற்றிக்கு இன்னும் 375 ரன்கள் தேவைப்படுகிறது. கைவசம் 4 விக்கெட்டுகளே உள்ளதால் இந்த ஆட்டத்தில் மேற்கு மண்டல அணிக்கு வெற்றி வாய்ப்பு அதிகமாக உள்ளது. நாளை கடைசி நாள் ஆட்டம் நடைபெறுகிறது.