துலீப் கோப்பை கிரிக்கெட்: மேற்கு, தெற்கு மண்டல அணிகள் இறுதிப்போட்டிக்கு தகுதி
|துலீப் கோப்பை கிரிக்கெட்டில் மேற்கு, தெற்குமண்டல அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறின.
பெங்களூரு,
துலீப் கோப்பை கிரிக்கெட்டில் மேற்கு-மத்திய மண்டல அணிகள் இடையிலான அரைஇறுதி ஆட்டம் பெங்களூருவின் புறநகர் பகுதியான ஆலூரில் நடந்தது. இதில் முதல் இன்னிங்சில் முறையே மேற்கு மண்டலம் 220 ரன்னும், மத்திய மண்டலம் 128 ரன்னும் எடுத்தன. 92 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை தொடங்கிய மேற்கு மண்டல அணி 3-வது நாள் முடிவில் 9 விக்கெட்டுக்கு 292 ரன்கள் எடுத்திருந்தது.
நேற்று 4-வது மற்றும் கடைசி நாள் ஆட்டம் நடந்தது. தொடர்ந்து ஆடிய மேற்கு மண்டல அணி மேலும் 5 ரன்கள் சேர்த்து 297 ரன்னில் ஆல்-அவுட் ஆனது. இதனால் மத்திய மண்டல அணிக்கு 390 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இந்த கடினமான இலக்கை நோக்கி 2-வது இன்னிங்சை ஆடிய மத்திய மண்டல அணி 35 ஓவர்களில் 4 விக்கெடுக்கு 128 ரன்கள் எடுத்து இருந்த போது மழை குறுக்கிட்டதால் அதற்கு மேல் ஆட்டத்தை தொடர முடியாத நிலை ஏற்பட்டது.
இதனால் இந்த ஆட்டம் டிராவில் முடிந்தது. அதிகபட்சமாக ரிங்கு சிங் 40 ரன்னில் (30 பந்து, 3 பவுண்டரி, 3 சிக்சர்) ஆட்டம் இழந்தார். அமன்தீப் காரே 27 ரன்னுடனும், விக்கெட் கீப்பர் உபேந்திர யாதவ் 18 ரன்னுடனும் ஆட்டம் இழக்காமல் இருந்தனர். போட்டி டிராவில் முடிந்தாலும் முதல் இன்னிங்ஸ் முன்னிலை அடிப்படையில் மேற்கு மண்டல அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் நடந்த மற்றொரு அரைஇறுதியில் முதல் இன்னிங்சில் முறையே வடக்கு மண்டலம் 198 ரன்னும், தெற்கு மண்டலம் 195 ரன்னும் எடுத்தன. 3 ரன் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை ஆடிய வடக்கு மண்டல அணி 211 ரன்னில் ஆல்-அவுட் ஆனதால் தெற்கு மண்டல அணிக்கு 215 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்டது. 215 ரன் இலக்குடன் 2-வது இன்னிங்சை தொடங்கிய தெற்கு மண்டல அணி 3-வது நாள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 21 ரன்கள் எடுத்து இருந்தது. சாய் சுதர்சன் 5 ரன்னுடனும், மயங்க் அகர்வால் 15 ரன்னுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
கடைசி நாளான நேற்று தொடர்ந்து பேட்டிங் செய்த சாய் சுதர்சன் 17 ரன்னிலும், அடுத்து வந்த ரவிகுமார் சமார்த் 5 ரன்னிலும் ஆட்டம் இழந்தனர். நிலைத்து நின்று ஆடிய மயங்க் அகர்வால் 54 ரன்னில் ஜெயந்த் யாதவ் பந்து வீச்சில் எல்.பி.டபிள்யூ. ஆனார். அடுத்து கேப்டன் ஹனுமா விஹாரி 43 ரன்னும், ரிக்கி புய் 34 ரன்னும், திலக் வர்மா 25 ரன்னும், வாஷிங்டன் சுந்தர் 2 ரன்னும் எடுத்து வெளியேறினர்.
36.1 ஓவர்களில் தெற்கு மண்டல அணி 8 விக்கெட்டுக்கு 219 ரன்கள் எடுத்து 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிப்போட்டியை எட்டியது. சாய் கிஷோர் 15 ரன்னுடனும், விஜய்குமார் வைஷாக் ரன் எதுவும் எடுக்காமலும் களத்தில் இருந்தனர். வடக்கு மண்டலம் தரப்பில் ஹர்சித் ராணா 3 விக்கெட்டும், பல்தேஜ் சிங், வைபவ் அரோரா தலா 2 விக்கெட்டும் கைப்பற்றினர்.
பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் வருகிற 12-ந்தேதி தொடங்கும் இறுதிப்போட்டியில் மேற்கு-தெற்கு மண்டல அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.