துலீப் கோப்பை கிரிக்கெட் அரைஇறுதி: புஜாரா சதத்தால் வலுவான நிலையில் மேற்கு மண்டலம
|துலீப் கோப்பை கிரிக்கெட்டில் மேற்கு-மத்திய மண்டல அணிகள் இடையிலான அரைஇறுதி ஆட்டம் பெங்களூருவின் புறநகர் பகுதியான ஆலூரில் நடந்து வருகிறது.
பெங்களூரு,
துலீப் கோப்பை கிரிக்கெட்டில் மேற்கு-மத்திய மண்டல அணிகள் இடையிலான அரைஇறுதி ஆட்டம் பெங்களூருவின் புறநகர் பகுதியான ஆலூரில் நடந்து வருகிறது. இதில் முதல் இன்னிங்சில் முறையே மேற்கு மண்டலம் 220 ரன்னும், மத்திய மண்டலம் 128 ரன்னும் எடுத்தன. 92 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை தொடங்கிய மேற்கு மண்டல அணி 2-வது நாள் முடிவில் 3 விக்கெட்டுக்கு 149 ரன்கள் எடுத்திருந்தது.
புஜாரா 50 ரன்னுடனும், சர்ப்ராஸ் கான் 6 ரன்னுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர். நேற்று 3-வது நாள் ஆட்டம் நடந்தது. முதல் ஓவரிலேயே சர்ப்ராஸ் கான் மேலும் ரன் எதுவும் எடுக்காமல் சவுரப் குமார் பந்து வீச்சில் விக்கெட் கீப்பர் உபேந்திரா யாதவிடம் சிக்கினார். அடுத்து வந்த வீரர்கள் விரைவில் ஆட்டம் இழந்தாலும், மறுமுனையில் நிலைத்து நின்று ஆடிய புஜாரா சதம் அடித்தார். அவர் முதல் தர போட்டியில் அடித்த 60-வது சதம் இதுவாகும்.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் சொதப்பியதால் வெஸ்ட்இண்டீஸ் தொடருக்கான இந்திய டெஸ்ட் அணியில் இருந்து நீக்கப்பட்ட புஜாரா தனது நேர்த்தியான ஆட்டத்தின் மூலம் தேர்வாளர்களின் கவனத்தை மீண்டும் ஈர்த்துள்ளார். இறுதியில் புஜாரா 133 ரன்னில் (278 பந்து, 14 பவுண்டரி, ஒரு சிக்சர்) ரன்-அவுட் ஆனார்.
மேற்கு மண்டல அணி 92 ஓவர்களில் 9 விக்கெட்டுக்கு 292 ரன்கள் எடுத்து இருந்த போது மழையால் ஆட்டம் பாதிக்கப்பட்டது. மழை தொடர்ந்து பெய்ததால் ஆட்டம் முன்கூட்டியே முடித்து கொள்ளப்பட்டது. இன்று 4-வது மற்றும் கடைசி நாள் ஆட்டம் நடக்கிறது. மேற்கு மண்டல அணி 384 ரன்கள் முன்னிலையுடன் வலுவாக உள்ளது.
பெங்களூருவில் உள்ள சின்னசாமி ஸ்டேடியத்தில் நடந்துவரும் மற்றொரு அரைஇறுதியில் முதல் இன்னிங்சில் முறையே வடக்கு மண்டலம் 198 ரன்னும், தெற்கு மண்டலம் 195 ரன்னும் எடுத்தன. 3 ரன் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை தொடங்கிய வடக்கு மண்டல அணி 2-வது நாள் முடிவில் 2 விக்கெட்டுக்கு 51 ரன்கள் எடுத்திருந்தது. 3-வது நாளான நேற்று தொடர்ந்து ஆடிய வடக்கு மண்டல அணி 56.4 ஓவர்களில் 211 ரன்னில் ஆல்-அவுட் ஆனது. அதிகபட்சமாக பிரப்சிம்ரன் சிங் 63 ரன் எடுத்தார்.
தெற்கு மண்டலம் தரப்பில் வேகப்பந்து வீச்சாளர் விஜய்குமார் வைஷாக் 5 விக்கெட்டும், சாய் கிஷோர் 3 விக்கெட்டும், வித்வாத் கவீரப்பா 2 விக்கெட்டும் வீழ்த்தினர். பின்னர் 215 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் 2-வது இன்னிங்சை ஆடிய தெற்கு மண்டல அணி 6.3 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 21 ரன்கள் எடுத்து இருந்த போது மழை குறுக்கிட்டதால் அத்துடன் ஆட்டம் முடிவுக்கு வந்தது. சாய் சுதர்சன் 5 ரன்னுடனும், மயங்க் அகர்வால் 15 ரன்னுடனும் களத்தில் உள்ளனர்.