துலீப் கோப்பை கிரிக்கெட் அரைஇறுதி: வடக்கு மண்டல அணி 198 ரன்னில் 'ஆல்-அவுட்'
|தெற்கு மண்டலம் தரப்பில் வேகப்பந்து வீச்சாளர் வித்வாத் கவீரப்பா 5 விக்கெட்டுகளை சாய்த்தார்.
பெங்களூரு,
துலீப் கோப்பை கிரிக்கெட் போட்டியில் வடக்கு-தெற்கு மண்டல அணிகள் இடையிலான அரைஇறுதி ஆட்டம் (4 நாள் போட்டி) பெங்களூருவில் நேற்று தொடங்கியது. 'டாஸ்' ஜெயித்த தெற்கு மண்டல அணியின் கேப்டன் ஹனுமா விஹாரி பீல்டிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து முதலில் பேட் செய்த வடக்கு மண்டல அணி, தெற்கு மண்டல வீரர்களின் அபார பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் முதல் இன்னிங்சில் 58.3 ஓவர்களில் 198 ரன்னில் ஆல்-அவுட் ஆனது. அதிகபட்சமாக பிரப்சிம்ரன் சிங் 49 ரன்னும், அங்கித் குமார் 33 ரன்னும், ஹர்சித் ராணா 31 ரன்னும் எடுத்தனர். தெற்கு மண்டலம் தரப்பில் வேகப்பந்து வீச்சாளர் வித்வாத் கவீரப்பா 5 விக்கெட்டும், சசிகாந்த் 2 விக்கெட்டும், சாய் கிஷோர், வாஷிங்டன் சுந்தர், விஜய்குமார் வைஷாக் தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர்.
பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய தெற்கு மண்டல அணி நேற்றைய ஆட்டம் முடிவில் 17 ஓவர்களில் 4 விக்கெட்டுக்கு 63 ரன்கள் எடுத்து தடுமாறியது. சாய் சுதர்சன் 9 ரன்னிலும், ரவிகுமார் சமார்த் 1 ரன்னிலும், கேப்டன் ஹனுமா விஹாரி, ரிக்கி புய் ஆகியோர் ரன் எதுவும் எடுக்காமலும் அடுத்தடுத்து ஆட்டம் இழந்து ஏமாற்றம் அளித்தனர். தொடக்க ஆட்டக்காரர் மயங்க் அகர்வால் 37 ரன்னுடனும், திலக் வர்மா 12 ரன்னுடனும் களத்தில் உள்ளனர். இன்று 2-வது நாள் ஆட்டம் நடைபெறும்.
ஆலூரில் தொடங்கியுள்ள மத்திய மண்டலத்துக்கு எதிரான அரைஇறுதியில் முதலில் பேட்டிங் செய்த மேற்கு மண்டல அணி முதல் நாள் முடிவில் முதல் இன்னிங்சில் 90 ஓவர்களில் 8 விக்கெட்டுக்கு 216 ரன்கள் எடுத்துள்ளது. அதித் ஷேத் 74 ரன்னும், தர்மேந்திசிங் ஜடேஜா 39 ரன்னும் எடுத்தனர். ஆனால் எதிர்பார்க்கப்பட்ட புஜாரா (28 ரன்), சூர்யகுமார் யாதவ் (7 ரன்), பிரித்வி ஷா (26 ரன்) பெரிய அளவில் சோபிக்கவில்லை. மத்திய மண்டல வேகப்பந்து வீச்சாளர் ஷிவம் மாவி 4 விக்கெட்டுகளை சாய்த்தார்.