< Back
கிரிக்கெட்
துலீப் கோப்பை கிரிக்கெட்: வடக்கு, மத்திய மண்டல அணிகள் அரைஇறுதிக்கு தகுதி
கிரிக்கெட்

துலீப் கோப்பை கிரிக்கெட்: வடக்கு, மத்திய மண்டல அணிகள் அரைஇறுதிக்கு தகுதி

தினத்தந்தி
|
2 July 2023 3:51 AM IST

துலீப் கோப்பை கிரிக்கெட் போட்டியில் வடக்கு, மத்திய மண்டல அணிகள் அரைஇறுதிக்கு தகுதி பெற்று உள்ளன.

பெங்களூரு,

துலீப் கோப்பை கிரிக்கெட் போட்டியில் வடக்கு-வடகிழக்கு மண்டல அணிகள் இடையிலான கால்இறுதி ஆட்டம் (4 நாள் போட்டி) பெங்களூருவில் நடந்தது. இதில் முதல் இன்னிங்சில் வடக்கு மண்டலம் 8 விக்கெட்டுக்கு 540 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. வடகிழக்கு மண்டலம் 134 ரன்னில் ஆல்-அவுட் ஆனது. 406 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை ஆடிய வடக்கு மண்டலம் 6 விக்கெட்டுக்கு 259 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்து வடகிழக்கு மண்டலத்துக்கு 666 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது.

இந்த இமாலய இலக்கை நோக்கி 2-வது இன்னிங்சை தொடங்கிய வடகிழக்கு மண்டலம் 3-வது நாள் முடிவில் 3 விக்கெட்டுக்கு 58 ரன்கள் எடுத்து இருந்தது. 4-வது மற்றும் கடைசி நாளான நேற்று தொடர்ந்து ஆடிய வடகிழக்கு மண்டல அணி 47.5 ஓவர்களில் 154 ரன்னில் 'ஆல்-அவுட்' ஆனது. இதனால் வடக்கு மண்டல அணி 511 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று அரைஇறுதிக்கு தகுதி பெற்றது. வடக்கு மண்டல வீரர் நிஷாந்த் சந்து (150 ரன்கள், 2 விக்கெட்) ஆட்டநாயகன் விருது பெற்றார்.

ஆலூரில் நடந்த மத்திய மண்டல அணிக்கு எதிரான கால்இறுதி ஆட்டத்தில் 300 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் 2-வது இன்னிங்சை நேற்று தொடர்ந்து ஆடிய கிழக்கு மண்டல அணி 41.2 ஓவர்களில் 129 ரன்னில் சுருண்டது. இதனால் மத்திய மண்டல அணி 170 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அரைஇறுதிக்குள் நுழைந்தது. இரண்டு இன்னிங்சிலும் சேர்த்து 11 விக்கெட்டுகள் கைப்பற்றிய மத்திய மண்டல ஆல்-ரவுண்டர் சவுரப் குமார் ஆட்டநாயகன் விருது பெற்றார்.

அரைஇறுதி ஆட்டங்களில் மத்திய-மேற்கு மண்டலம், வடக்கு-தெற்கு மண்டலம் அணிகள் மோதுகின்றன. இந்த ஆட்டங்கள் முறையே ஆலூர் மற்றும் பெங்களூரு மைதானங்களில் வருகிற 5-ந்தேதி தொடங்குகின்றன.

மேலும் செய்திகள்