குடிபோதையில் மனைவி மீது தாக்குதல்; கிரிக்கெட் வீரர் காம்ப்ளிக்கு பாந்த்ரா போலீஸ் நோட்டீஸ்
|குடிபோதையில் மனைவியை தாக்கிய புகாரில் கிரிக்கெட் வீரர் காம்ப்ளி நேரில் விசாரணைக்கு ஆஜராகும்படி பாந்த்ரா போலீஸ் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
பாந்த்ரா,
மராட்டியத்தின் பாந்த்ரா (மேற்கு) பகுதியில் உள்ள பிளாட் ஒன்றில் முன்னாள் கிரிக்கெட் வீரர் வினோத் காம்ப்ளி குடும்பத்துடன் வசித்து வருகிறார். இந்நிலையில், காம்ப்ளி மீது அவரது மனைவி ஆண்ட்ரியா போலீசில் புகார் அளித்து உள்ளார்.
அதில், காம்ப்ளி வீட்டில் நன்றாக குடித்து விட்டு, போதையில் இருந்து உள்ளார். அப்போது, மனைவியை பார்த்து, தகாத வார்த்தைகளால் திட்டியபடி இருந்து உள்ளார். இதனை அவரது 12 வயது மகன் உடன் இருந்து பார்த்த சாட்சியாக உள்ளார்.
இதன்பின், காம்ப்ளி சமையலறைக்கு உள்ளே சென்று சமையல் செய்ய உபயோகப்படும் பாத்திரம் ஒன்றின் கைப்பிடியை எடுத்து வந்து மனைவி மீது வீசி இருக்கிறார். இதில், மனைவியின் தலையில் காயம் ஏற்பட்டு உள்ளது என புகாரில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதனை தொடர்ந்து, ஆபத்து விளைவிக்கும் ஆயுதங்களால் காயம் ஏற்படுத்துதல், அவமதிப்பு உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் பாந்த்ரா போலீசார் எப்.ஐ.ஆர். பதிவு செய்து உள்ளனர். தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.
இதனையொட்டி, மும்பை பாந்த்ரா போலீசார் காம்ப்ளியின் வீட்டுக்கு இன்று நேரில் சென்றனர். 41ஏ பிரிவின் கீழ், அவரை நேரில் ஆஜராகி வாக்குமூலம் அளிக்கும்படி கூறுவதற்கான நோட்டீசை வழங்க அவர்கள் சென்றனர். இதுவரை அவர் கைது செய்யப்படவில்லை என மும்பை போலீசார் தெரிவித்து உள்ளனர்.
காம்ப்ளி ஆத்திரத்தில் பேட் ஒன்றையும் எடுத்து, மனைவியை அடிக்க போயுள்ளார். எனினும், அவரை தடுத்து பேட்டை பறித்து மனைவி ஆண்ட்ரியா தூர வீசியுள்ளார். இதன்பின், தனது இரு குழந்தைகளையும் அழைத்து கொண்டு வீட்டை விட்டு அவர் வெளியேறி உள்ளார்.
அவர் பாந்த்ராவில் உள்ள பாபா மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுள்ளார். அதன்பின் போலீசுக்கு சென்று புகார் அளித்து உள்ளார். மருத்துவ அறிக்கை நகலையும் ஆண்ட்ரியா போலீசிடம் சமர்ப்பித்து இருக்கிறார். தொடர்ந்து விசாரிக்கப்பட்டு வருகிறது.
காம்ப்ளி 2 இரட்டை சதத்துடன் 17 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி, பேட்டிங் சராசரி 54.20 வைத்திருக்கிறார். 1,084 ரன்கள் சேர்த்து உள்ளார். 104 ஒரு நாள் போட்டிகளில் விளையாடி 2,477 ரன்கள் சேர்த்து உள்ளார். 32.59 சராசரி வைத்து உள்ளார்.