< Back
கிரிக்கெட்
நான் சேர்ந்து விளையாடியதிலேயே அவர்தான் மிகவும் சுயநலமற்ற வீரர் - கம்பீர்
கிரிக்கெட்

நான் சேர்ந்து விளையாடியதிலேயே அவர்தான் மிகவும் சுயநலமற்ற வீரர் - கம்பீர்

தினத்தந்தி
|
28 July 2024 9:28 AM IST

இந்திய அணியின் புதிய பயிற்சியாளரான கம்பீருக்கு ராகுல் டிராவிட் வாழ்த்து செய்தி தெரிவித்திருந்தார்.

மும்பை,

இலங்கைக்கு சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி மூன்று டி20 மற்றும் 3 ஒரு நாள் போட்டிகளில் ஆடுகிறது. இதில் இந்த இரு அணிகளுக்கு இடையே முதலில் டி20 தொடர் நடைபெற்று வருகிறது. அதன்படி இந்தியா- இலங்கை இடையிலான முதலாவது டி20 போட்டி பல்லகெலேயில் நேற்று நடந்தது. இதில் இந்தியா 43 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இது இந்திய அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக கவுதம் கம்பீரின் முதல் போட்டியாகும். பயிற்சியாளர் பயணத்தை வெற்றியுடன் தொடங்கியுள்ளார். இந்த போட்டிக்கு முன்னதாக கவுதம் கம்பீருக்கு இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளரான ராகுல் டிராவிட் வாழ்த்து செய்தி தெரிவித்தார்.

அதனைக்கேட்டு நெகிழ்ச்சியடைந்த கம்பீர் தம்முடன் விளையாடிய வீரர்களிலேயே ராகுல் டிராவிட்தான் மிகவும் சுயநலமற்றவர் என்று பாராட்டியுள்ளார்.

இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு:- "இந்த வாழ்த்துக்கு எப்படி ரியாக்ட் செய்வது என்பது எனக்கு தெரியவில்லை. ஏனெனில் இந்த மெசேஜ் எனக்கு மிகவும் பெரியது. அது வெற்றிகரமாக செயல்பட்டவரிடமிருந்து வந்துள்ளது என்பதால் மட்டுமல்ல. நான் விளையாடும்போது பார்த்த ஒருவரிடமிருந்து எனக்கு வாழ்த்து வந்துள்ளது மிகவும் பெரியது. இந்த விஷயத்தை நான் எப்போதும் உணர்ந்துள்ளேன். அதை பல்வேறு பேட்டிகளிலும் நான் நிறைய சொல்லியுள்ளேன். அதாவது நான் சேர்ந்து விளையாடியதிலேயே ராகுல் பாய் மிகவும் சுயநலமற்ற கிரிக்கெட்டர். இந்திய கிரிக்கெட்டுக்கு தேவையான அனைத்தையும் ராகுல் பாய் செய்துள்ளார்.

நான் மட்டுமல்ல தற்போதைய தலைமுறையும் அடுத்த தலைமுறையும் அவரிடமிருந்து கற்றுக்கொள்ள நிறைய இருக்கிறது. அந்தளவுக்கு அவர் இந்திய கிரிக்கெட்டுக்கு மிகவும் முக்கியமானவர். பொதுவாக நான் அதிகமாக உணர்ச்சி வசப்பட மாட்டேன். ஆனால் அவருடைய இந்த மெசேஜ் என்னை உணர்ச்சி வசப்படுத்தியுள்ளது. அவருடைய இடத்தை நிரப்புவது என்பது மிகப் பெரியது. முழுமையான நேர்மறையுடன், வெளிப்படைத் தன்மையுடன் அதைச் செய்ய முடியும் என்று நம்புகிறேன். இந்தப் பணியில் மொத்த இந்தியா மட்டுமின்றி நான் எப்போதும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் நபரான ராகுல் டிராவிட்டையும் பெருமைப்பட வைப்பேன்" என்று கூறினார்.

மேலும் செய்திகள்