பாகிஸ்தானில் நேரத்தை வீணடிக்காதீர்கள் கேரி...மீண்டும்.. - ஹர்பஜன்
|இனிமேலும் பாகிஸ்தான் அணியிலிருந்து நேரத்தை வீணடிக்காதீர்கள் என்று கேரி கிறிஸ்டனுக்கு ஹர்பஜன் சிங் அறிவுரை வழங்கியுள்ளார்.
மும்பை,
நடப்பு டி20 உலகக்கோப்பை தொடரில் ஏ பிரிவில் இடம்பெற்றிருந்த பாகிஸ்தான் அணியானது 2 வெற்றிகள் மட்டுமே பெற்ற நிலையில் லீக் சுற்றுடன் வெளியேறியது. முதலாவது ஆட்டத்தில் அமெரிக்காவிடம் தோல்வியடைந்த பாகிஸ்தான், 2-வது ஆட்டத்தில் இந்தியாவிடம் வீழ்ந்தது. இதனால் கடைசி 2 போட்டிகளில் வெற்றி பெற்றாலும் அந்த அணியால் சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேற முடியவில்லை.
இந்த டி20 உலகக்கோப்பை தொடருக்கு சில வாரங்களுக்கு முன்பாக பாகிஸ்தான் வெள்ளைப்பந்து (ஒருநாள் மற்றும் 20 ஓவர்) அணியின் தலைமை பயிற்சியாளராக கேரி கிறிஸ்டன் பொறுப்பேற்றார். 2011-ம் ஆண்டு உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி கோப்பையை வென்றதற்கு முக்கிய காரணமாக இருந்தவர் கேரி கிறிஸ்டன்.
அதன்பின் தென்னாப்பிரிக்கா அணிக்கு பயிற்சியாளராக இருந்த அவர், ஐபிஎல் தொடரில் ஏராளமான அணிகளுடன் பணியாற்றி வருகிறார். அவரது பயிற்சியின் கீழ் பாகிஸ்தான் எழுச்சிபெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவருடைய தலைமையிலும் எந்த முன்னேற்றத்தையும் சந்திக்காத பாகிஸ்தான் முதல் சுற்றுடன் வெளியேறியது.
அந்த சூழ்நிலையில் பாகிஸ்தான் அணியில் யாரிடமும் ஒற்றுமை இல்லையென கேரி கிறிஸ்டன் அதிருப்தியை வெளிப்படுத்தினார். மேலும் அனைத்து வீரர்களும் பிரிந்து கிடப்பதாக தெரிவித்த அவர் பாகிஸ்தான் போன்ற அணியை பார்த்ததில்லை என்று சமீபத்தில் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் இனிமேலும் பாகிஸ்தான் அணியிலிருந்து நேரத்தை வீணடிக்காதீர்கள் என்று கேரி கிறிஸ்டனுக்கு இந்திய முன்னாள் வீரரான ஹர்பஜன் சிங் அறிவுரை வழங்கியுள்ளார்.
இது குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் ஹர்பஜன் சிங் பதிவிட்டுள்ளது பின்வருமாறு:- "அங்கே (பாகிஸ்தான்) உங்களுடைய நேரத்தை வீணடிக்காதீர்கள் கேரி. இந்திய அணிக்கு பயிற்சியாளராக செயல்பட மீண்டும் வாருங்கள். கேரி கிறிஸ்டன் ஒரு அரிதான வைரம். மகத்தான பயிற்சியாளர், ஆலோசகர். எங்களுடைய அன்பான நண்பர். நாங்கள் 2011 உலகக் கோப்பை வென்ற பயிற்சியாளர். கேரி சிறப்பான மனிதர்" என்று பதிவிட்டுள்ளார்.