< Back
கிரிக்கெட்
விராட் கோலியுடன் என்னை ஒப்பிடாதீர்கள் - ஸ்மிருதி மந்தனா

Image Courtesy : PTI 

கிரிக்கெட்

விராட் கோலியுடன் என்னை ஒப்பிடாதீர்கள் - ஸ்மிருதி மந்தனா

தினத்தந்தி
|
11 Aug 2024 1:58 AM IST

நம்பர் 18-வது ஜெர்ஸியை அணிந்து விளையாடுகிறேன் என்பதற்காக விராட் கோலியுடன் என்னை ஒப்பிடாதீர்கள் என மந்தனா கூறியுள்ளார்.

புதுடெல்லி,

இந்திய ஆண்கள் கிரிக்கெட்டின் முன்னணி பேட்ஸ்மேன் விராட் கோலி. இவர் இந்திய அணிக்காக மூன்று வித கிரிக்கெட்டிலும் ஆடி பல்வேறு சாதனைகளை படைத்துள்ளார். சமீபத்தில் நடைபெற்ற டி20 உலகக்கோப்பை இறுதி ஆட்டத்தில் அபாரமாக ஆடி இந்தியா கோப்பை வெல்ல உதவினார்.

டி20 உலகக்கோப்பை தொடரில் இந்தியா சாம்பியன் பட்டம் வென்றதும் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். அதேசமயம் ஒருநாள் மற்றும் டெஸ்ட் கிரிக்கெட்டில் தொடர்ந்து விளையாடுவேன் எனவும் கூறினார்.

ஆண்கள் கிரிக்கெட்டில் விராட் கோலி போலவே, பெண்கள் கிரிக்கெட்டில் இந்தியாவின் முன்னணி வீராங்கனையாக ஸ்மிருதி மந்தனா இருந்து வருகிறார். துவக்க வீராங்கனையான மந்தனா 3 வகையான கிரிக்கெட்டிலும் கிட்டத்தட்ட விராட் கோலி போலவே தொடர்ந்து பெரிய ரன்கள் குவித்து வெற்றிகளில் பங்காற்றி வருகிறார்.

அதனால் அந்த இருவரையும் இந்திய ரசிகர்கள் ஒப்பிட்டு கொண்டாடுவது வழக்கமாக உள்ளது. சொல்லப்போனால் விராட் கோலியை போலவே ஸ்மிருதி மந்தனாவின் ஜெர்ஸி நம்பர் 18 ஆகும். மேலும் ஐ.பி.எல் (ஆண்கள் மற்றும் பெண்கள் தொடர்) தொடரில் இருவரும் பெங்களூரு அணிக்காக ஆடி வருகின்றனர்.

இந்நிலையில் ஜெர்ஸி நம்பர் ஒன்றாக உள்ளது என்பதற்காக விராட் கோலியுடன் என்னை ஒப்பிட்டு பேசாதீர்கள் என ஸ்மிருதி மந்தனா கூறியுள்ளார். இது தொடர்பாக சமீபத்திய நிகழ்ச்சி ஒன்றில் அவர் கூறியதாவது, விராட் கோலி மகத்தான வீரர். இந்திய கிரிக்கெட்டுக்காக அவர் செய்துள்ள சாதனைகள் அற்புதமானது.

ஆனால் நான் நம்பர் 18-வது ஜெர்ஸியை அணிந்து விளையாடுகிறேன் என்பதற்காக அவருடன் என்னை ஒப்பிடாதீர்கள். அது போன்ற ஒப்பீடுகள் எனக்குப் பிடிக்காது. இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்