< Back
கிரிக்கெட்
என்னிடம் இதுபோன்ற கேள்விகளைக் கேட்காதீர்கள்...: நிதானத்தை இழந்த ரோகித் சர்மா

 image courtesy;AFP

கிரிக்கெட்

"என்னிடம் இதுபோன்ற கேள்விகளைக் கேட்காதீர்கள்...": நிதானத்தை இழந்த ரோகித் சர்மா

தினத்தந்தி
|
5 Sept 2023 4:06 PM IST

உலகக்கோப்பை தொடருக்கான 15 பேர் கொண்ட இந்திய அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கண்டி,

இந்தியாவில் வரும் அக்டோபர், நவம்பர் மாதங்களில் 50 ஓவர் உலகக்கோப்பை தொடர் நடைபெற உள்ளது. இந்த தொடரில் இந்தியா, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, இங்கிலாந்து உள்ளிட்ட 10 அணிகள் கலந்து கொள்கின்றன. அக்டோபர் 5ம் தேதி நடைபெற உள்ள தொடக்க ஆட்டத்தில் இங்கிலாந்தும், நியூசிலாந்தும் அகமதாபாத்தில் மோத உள்ளன. இந்திய அணி தனது தொடக்க ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவை சென்னையில் எதிர்கொள்கிறது.

இலங்கையின் கண்டியில் பத்திரிக்கையாளர் சந்திப்பில் இந்திய கேப்டன் ரோகித் சர்மாவுடன் பிசிசிஐ தலைமை தேர்வாளர் அஜித் அகர்கர் உலகக்கோப்பைக்கான இந்திய அணியை அறிவித்தார். ரோகித் சர்மா தலைமையிலான அணியில் ஆசிய கோப்பை தொடரில் இடம் பெற்றிருந்த வீரர்களில் இருந்து திலக் வர்மா, சஞ்சு சாம்சன், பிரசித் கிருஷ்ணா ஆகியோர் நீக்கப்பட்டு மீதமுள்ள 15 வீரர்கள் உலகக்கோப்பைக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

இந்த நிகழ்வில் பத்திரிக்கையாளர் ஒருவர் ரோகித் சர்மாவிடம் வெளியில் அணி குறித்து எழுப்பும் கேள்விகள் குறித்து கேட்டார். இதில் நிதானத்தை இழந்த ரோகித், "இதுபோன்ற கேள்விகளை என்னிடம் கேட்காதீர்கள். வெளியில் இருந்து வரும் சத்தத்தை நாங்கள் கவனிக்க விரும்பவில்லை. நான் ஏற்கனவே பலமுறை சொல்லிவிட்டேன். அந்த விஷயங்களை நாங்கள் கவனிக்கவில்லை. அந்த கேள்விகளுக்கு நான் பதிலளிக்க மாட்டேன்'' என்று கூறினார்.

மேலும் ரோகித் அணித்தேர்வு குறித்து பேசினார். அதில் "நாங்கள் சிறந்த கலவையான வீரர்களை தேர்ந்தெடுத்துள்ளோம். எங்களிடம் பேட்டிங்கில் ஆழம் உள்ளது. அணியில் சுழற்பந்து மற்றும் பிற பந்துவீச்சு விருப்பங்கள் உள்ளன. ஹர்திக் பாண்ட்யா ஒரு முழுமையான ஆல்-ரவுண்டராக உள்ளார். அவரது பார்ம் உலகக்கோப்பையில் அணிக்கு முக்கியமானதாக இருக்கும்" என்று கூறினார்.

உலகக் கோப்பைக்கான இந்திய அணி: ரோகித் சர்மா (கேப்டன்), சுப்மான் கில், விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், இஷான் கிஷன், கே.எல். ராகுல், ஹர்திக் பாண்ட்யா (துணை கேப்டன்), சூர்யகுமார் யாதவ், ரவீந்திர ஜடேஜா, அக்சர் படேல், ஷர்துல் தாக்கூர், ஜஸ்பிரித் பும்ரா, முகமது ஷமி, முகமது சிராஜ், குல்தீப் யாதவ்.

மேலும் செய்திகள்