3-வது இடத்தில் புஜாரா, டிராவிட் போல் அசத்த வேண்டுமெனில் இதை செய்யுங்கள் - கில்லுக்கு அறிவுரை வழங்கிய முன்னாள் வீரர்
|இந்தியா - இங்கிலாந்து இடையிலான முதல் டெஸ்ட் போட்டி ஐதராபாத்தில் நடைபெற்று வருகிறது.
ஐதராபாத்,
இந்தியா - இங்கிலாந்து இடையிலான முதல் டெஸ்ட் போட்டி ஐதராபாத்தில் நடைபெற்று வருகிறது. இதில் முதலில் பேட்டிங் ஆடிய இங்கிலாந்து தனது முதல் இன்னிங்சில் 246 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. இதையடுத்து தனது முதல் இன்னிங்சை ஆடி வரும் இந்திய அணி 2ம் நாள் ஆட்ட நேர முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 421 ரன்கள் எடுத்து 175 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.
இந்த ஆட்டத்தில் இந்திய அணியில் 3வது வரிசையில் களம் இறங்கிய சுப்மன் கில் 66 பந்தில் 23 ரன் எடுத்து அவுட் ஆனார். சமீப காலமாக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த தவறி வரும் சுப்மன் கில்லை அணியிலிருந்து நீக்குமாறு விமர்சனங்கள் எழுந்துள்ளன.
இந்நிலையில் டெஸ்ட் கிரிக்கெட்டில் 3வது வரிசையில் டிராவிட், புஜாரா போல அசத்த வேண்டுமெனில் பவுண்டரிகள் அடிப்பதை விட ஸ்ட்ரைக்கை மாற்றி மாற்றி சிங்கிள் எடுத்து எதிரணி மீது அழுத்தத்தை போட வேண்டும் என சுப்மன் கில்லுக்கு இந்திய முன்னாள் வீரர் அனில் கும்ப்ளே அறிவுரை வழங்கி உள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது,
நீங்கள் ஸ்ட்ரைக்கை மாற்றவில்லை என்றால் தொடர்ந்து அழுத்தம் வளர்ந்து கொண்டே இருக்கும். அதை அவர் கற்றுக்கொள்ள வேண்டும். குறிப்பாக ஸ்பின்னர்கள் ஆதிக்கம் செலுத்தக்கூடிய இந்திய மைதானங்களில் அவர் 3-வது இடத்தில் வெற்றிகரமாக செயல்பட விரும்பினால் ஸ்ட்ரைக்கை தொடர்ந்து மாற்ற வேண்டும்.
இந்த போட்டியில் கூட அவர் தன்னுடைய விக்கெட்டை இழந்து விடக்கூடாது என்பதற்காக மட்டுமே நேரம் எடுத்து விளையாடினார். நீங்கள் 3-வது இடத்தில் புஜாரா அல்லது டிராவிட் போல அசத்த வேண்டுமெனில் ஸ்ட்ரைக்கை மாற்ற வேண்டும். சுழல் பந்துகளுக்கு எதிராக அவர் மெதுவான கைகளுடன் மணிக்கட்டை பயன்படுத்தி விளையாட வேண்டும். இது அவர் தன்னுடைய பேட்டிங்கில் சேர்க்க வேண்டிய ஒரு அம்சமாகும். இவ்வாறு அவர் கூறினார்.